பீப்பாயில் கடலைக் கடக்கும் பிரான்ஸ் நாட்டவர்: முயற்சி கைகூடுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

வெறும் மூன்று மீற்றர் நீளமுள்ள பீப்பாய் (Barrel) ஒன்றை பயன்படுத்தி செய்யப்பட்ட, துடுப்புகளோ இயந்திரங்களோ இல்லாத சிறு படகு ஒன்றின் உதவியுடன் அட்லாண்டிக்குக்கு குறுக்கே கடலில் பயணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர்.

Jean-Jacques Savin (71), கடலின் நீரோட்டத்தை மட்டுமே நம்பி, மூன்று மாதங்களுக்குள் கரீபியன் கடலை சென்றடையும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

சீதோஷ்ண நிலை நன்றாக இருப்பதால் மணிக்கு இரண்டு முதல் மூன்று கிலோமீற்றர் வேகத்திற்கு தன்னால் பயணிக்க முடிகிறது என்கிறார் அவர்.

மூன்று மீற்றர் நீளமும் 2.10 மீற்றர் அகலமும் கொண்ட அந்த சிறு படகு 450 கிலோ எடையுள்ளது.

ரெஸின் பூசப்பட்ட பிளைவுட்டால் செயப்பட்ட அந்த சிறிய படகிற்குள் ஆறு சதுர அடியில் ஒரு அறையும், அதனுள்ளேயே ஒரு சமையலறையும், தூங்குவதற்கு ஒரு சிறு கட்டிலும் பொருட்களை சேமித்து வைப்பதற்கான ஒரு அறையும் உள்ளன. அந்த சிறு படகில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடி ஜன்னல் வழியே கடலில் நீந்தும் மீன்களை Savinஆல் காண முடியும்.

ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ள Savin ஒரு பைலட்டாகவும், வன விலங்குகள் பாதுகாவலராகவும் பணியாற்றியுள்ளார்.

புத்தாண்டுக்கு முன்னிரவைக் கொண்டாடுவதற்கு வசதியாக, வாத்துக் கறியும், ஒயினும், ஜனவரி மாதம் 14ஆம் திகதி வரும் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக, சிறப்பு மதுபானம் ஒன்றையும் சேகரித்து வைத்துள்ளார் Savin.

துடுப்பு போடாமலே தன்னை கடலின் நீரோட்டம் பத்திரமாக கரீபியன் பகுதிக்கு கொண்டு சேர்த்து விடும் என்று நம்புகிறார் அவர்.

தான் பயணப்படும் வழியெங்கும் சர்வதேச கடல் கண்காணிப்பு அமைப்பு, நீரோட்டங்களைப் பற்றி ஆராய்வதற்கு வசதியாக அடையாளங்களையும் விட்டுச் செல்கிறார் அவர்.

அவரது உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது ஆராயப்பட உள்ளதோடு, அவர் கொண்டு செல்லும் மதுபானமும் ஆய்வுக்குள்ளாக்கப்பட இருக்கிறது.

இந்த கடல் பயணத்திற்காக அவருக்கு ஆகும் செலவு என கணக்கிடப்பட்டுள்ள 60,000 யூரோக்கள் தொகையில் ஒரு பகுதி, பீப்பாயால் ஆன அவரது சிறு படகை உருவாக்கிய நிறுவனத்தாலும், மீதி அவருக்கு உதவுவதற்காக பணம் சேகரிக்கும் ஒரு குழுவாலும் சந்திக்கப்படும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers