பிரான்சில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு... 4 பேர் மரணம், 11 பேர் படுகாயம்: அலறியபடி சிதறி ஓடிய பொதுமக்கள்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

வடகிழக்கு பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் அமைந்திருந்த கிறிஸ்துமஸ் சந்தையில் குவிந்திருந்த மக்கள் மீது மர்ம நபர் துப்பாகியால் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 11 பேர் படுகாயமடைந்ததாகவும் படுகாயத்துடன் தப்பிய தாக்குதல்தாரியை பயங்கரவாத தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்த 11 பேரில் ஒருவர் சுற்றுலாபயணி எனவும், அவரது வயிற்றில் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Grand-Est மற்றும் Bas-Rhin பகுதி மக்கள் குறித்த பகுதியை தவிர்க்க வேண்டும் என உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய நபரை பொலிசாருக்கு ஏற்கெனவே தெரியும் எனவும், பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா அல்லது கிறிஸ்துமஸ் சந்தையை குறிவைத்துதான் தாக்குதல் திட்டமிட்டாரா என்பது தொடர்பில் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை வெளியே செல்ல உணவக நிர்வாகிகள் மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஸ்ட்ராஸ்பர்க் நகரம் பொலிசாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பொலிசார் எந்திர துப்பாக்கியுடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும், ரோந்துப்பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் நடந்த கிறிஸ்துமஸ் சந்தையின் சுற்றுவட்டாரத்தில் செயல்பட்டுவரும் டிராம் வண்டிகளை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி நிறுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி ஐரோப்பிய பாராளுமன்றவும் குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த பகுதியானது ஆண்டுக்கு 2 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் பிரபலமான பகுதியாகும்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், சாலைகளில் நடமாட்டத்தை தவிர்க்கவும் பிரான்ஸ் உள்விவகாரத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers