எரிபொருள் வரி உயர்வை கண்டித்து போராட்டம்... 481 பேர் கைது! பதற்றத்தில் பாரிஸ் நகரம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்பதால், நூற்றுக்கணக்கானவர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரிஸ் நகரில் எரிபொருள் வரி விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் துவங்கியது. மஞ்சள் ஆடை அணிந்து பலர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கையில் ஆயுதங்கள் ஏந்திய இளைஞர்கள் பலர், பாரிஸ் தெருக்களில் இறங்கி வாகனங்களை சேதப்படுத்தினர். இதனால் வன்முறை மேலும் கட்டுக்கடங்காமல் சென்றது.

இதனைத் தொடர்ந்து, அவசரநிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்தது. எனினும், குறிப்பிட்ட சில வரிகளை நீக்கி, எரிபொருள் விலையை பிரான்ஸ் அரசு சற்றுக் குறைத்ததைத் தொடர்ந்து, போராட்டம் சற்று தணிந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் மீண்டும் பிரான்சில் போராட்டம் நடத்தப்படும் என்று அரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், பாரிஸ் உட்பட முக்கிய நகரங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பெருமளவில் பலப்படுத்தப்பட்டது. பாரிசில் நடக்கும் வன்முறைகளை அடக்குவதற்காக பொலிஸ் தலைமையகம் திட்டம் வகுத்திருந்தது.

ஆனால், மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த திட்டம் நேற்றைய தினம் இணையத்தில் கசிந்ததால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது கிடைத்த தகவலின்படி, மொத்தமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் 481 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து சுத்தியல்கள், கற்கள், பெட்ரோல் எரிகுண்டுகள் முதலிய பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த 1ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தின் நாள் முடிவில் 412 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

AP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers