சூடு பிடிக்கும் பிரெக்சிட் விவகாரம்: அதிரடி நடவடிக்கைகளில் இறங்கும் பிரான்ஸ்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி இரவு 11 மணிக்கு பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற இருக்கிறது.

பிரெக்சிட் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு உலக நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பல நாடுகள் பிரெக்சிட்டுக்குப் பின் பிரித்தானியாவுடனான உறவுகள் தொடர்பாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பிரான்சும் தன் பங்குக்கு எடுக்க இருக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முன் வைக்கப்பட்டுள்ள ஒரு மசோதாவில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அவற்றில் முக்கியமான ஒன்று, பிரித்தானியா புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றிற்கு சம்மதிக்காமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமானால், பிரான்ஸ் பிரித்தானியாவை இன்னொரு மூன்றாவது நாடாகவே கருதும்.

அதன் பொருள் என்னவென்றால், பிரான்சுக்கு வரும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் விசா இருந்தால்தான் பிரான்சுக்குள் நுழைய முடியும்.

அதேபோல் பிரான்சுக்குள் வரும் பிரித்தானியப் பொருட்கள் எல்லையில் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படும்.

என்றாலும், பிரித்தானியா பிரான்சுடன் ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தை செய்து கொண்டால், இந்த விசா தேவைகளிலிருந்து அதற்கு விலக்கு அளிக்கப்படும்.

மேலும் பிரித்தானியாவில் பிரான்ஸ் குடிமக்கள் எவ்விதம் நடத்தப்படுவார்களோ அது போலத்தான் பிரித்தானியர்கள் பிரான்சில் நடத்தப்படுவார்கள். பிரித்தானியர்கள் சட்டப்பூர்வமாக பிரான்சில் வாழ்வதற்கு குடியிருப்பு உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

அறிவிப்புகளோடு நிற்காமல் பிரான்ஸ் சில நடவடிக்கைகளிலும் இறங்கத் தொடங்கி விட்டது.

அவற்றில் ஒன்று, எல்லையில் சோதனைகளை மேற்கொள்வதற்காக, கூடுதலாக 700 சுங்கத்துறை அலுவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பரஸ்பர ஒப்பந்தங்கள் இன்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பட்சத்தில், பிரித்தானியர்கள் சட்ட விரோத அந்நியர்களாக கருதப்படுவார்கள் என்பது மட்டுமின்றி, அதைத் தவிர்ப்பதற்காகவே இந்த மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் பிரான்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்