குழந்தைகள் இனி கார்ட்டூன் பார்க்க வேண்டும்:பிரான்ஸ் அரசு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்ப்பதற்காக இனி அவர்கள் ஆங்கில கார்ட்டூன்கள் பார்க்கட்டும் என பிரான்ஸ் கல்வி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சமீபத்தில் ஐரோப்பாவில் அந்நிய மொழி ஒன்றைக் கற்பிப்பதில் ஐரோப்பிய நாடுகள் எந்த அளவில் உள்ளன என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 16 நாடுகளில் பிரான்ஸ் 15ஆவது இடத்தைப் பிடித்தது.

இது குறித்து கூறும்போது பிரான்ஸ் கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer, நமது ஸ்காண்டினேவிய அயலகத்தார் மிகவும் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்கள் ஆங்கில படங்களை ஆங்கிலத்திலேயே பார்க்கிறார்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும் என்றார்.

பிரான்சில் ஆங்கில அறிவை வளர்ப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் பிரான்சிலுள்ள ஆரம்பப் பள்ளி மாணவர்கள் கார்ட்டூன்களை ஆங்கிலத்தில் பார்ப்பது ஊக்குவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோல அறிவியல், வரலாறு மற்றும் கணிதம் போன்ற பாடங்களையும் பிரெஞ்சு மொழியில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் கற்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் பிரான்சில் ஆறு வயதிலேயே மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது, ஆனால் அவர்களது ஆசிரியர்களுக்கு போதுமான மொழிப்பயிற்சி இல்லை, அவர்கள் ஆங்கிலப் புலமையில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள்.

பிரான்ஸ் ஆங்கிலத்தில் பின்தங்கியிருப்பதற்கு இன்னும் சில காரணங்களும் உள்ளன.

ஒரு காலத்தில் நம் நாட்டில் இன்னொரு குறிப்பிட்ட மொழி பேசுவது மேலோங்கியிருந்தது.

பின்னர் பிரெஞ்சு மொழியைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கில ஊடுருவலை நாம் எதிர்க்க வேண்டியிருந்தது, இதனால் பிற மொழிகள் நம் நாட்டில் குறைவாகவே இருக்கின்றன என்கிறார் Christian Puren என்னும் மொழியியல் பேராசிரியர் ஒருவர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானைப் பொருத்தவரையில் மொழித்திறன் உட்பட கல்வியை முன்னேற்றுவது அவரது தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.

முக்கிய கூட்டம் ஒன்றில் ஆங்கிலத்தில் பேசியதற்காக அவருக்கு எதிர்ப்பு தோன்றியபோதிலும் மாணவர்கள் ஆங்கிலம் கற்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும், அது மாணவர்களுக்கு நல்லது என்பதில் அவர் உறுதியாக இருந்தார், இருக்கிறார்.

இது தவிர கல்வியில் பின் தங்கி இருக்கும் பகுதிகளில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் வகுப்புகளில் மாணவர்களின் அளவை பாதியாகக் குறைப்பது, தினமும் மாணவர்களுக்கு டிக்டேஷன் கொடுப்பது போன்ற சீர்திருத்தங்களும் கல்வித் துறையில் கொண்டு வரப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers