சர்ச்சையில் சிக்கிய செரீனாவின் உடை: கோபத்தில் ரசிகர்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தனது முதல் குழந்தை பிறந்ததிலிருந்தே இரத்தக் கட்டிகளால் அவதியுற்ற செரீனா வில்லியம்ஸ், அவை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் உடல் முழுவதையும் கவ்விப் பிடிக்கும் வகையிலான ஒரு உடையை அணிந்து விளையாட ஆரம்பித்தார்.

ஒரு சூப்பர் ஹீரோ போன்ற உணர்வை அளிக்கும் அந்த உடையை அவர் கடினமான பிரசவத்திலிருந்து மீண்ட பெண்களுக்கும் பரிந்துரை செய்தார்.

ஆனால் பிரெஞ்சு டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவரான Bernard Giudicelli, உடைக் கட்டுப்பாடுகளின்படி செரீனாவின் அந்த உடை அடுத்த ஆண்டு போட்டிகளின்போது தடை செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

அடுத்த ஆண்டு போட்டிகளின்போது உடை கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர் சில நேரங்களில் நாம் எல்லை மீறிப்போய் விடுகிறோம் என்றும் கூறியிருந்தார்.

அதிலும் அவர் செரீனாவின் உடையைக் குறிவைத்தே அவ்வாறு கூறியிருந்தார். அந்த உடையை ஏற்றுக் கொள்ள முடியாது, நாம் விளையாட்டையும் விளையாடும் இடத்தையும் மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Giudicelliயின் கருத்து உடனடியாக சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செரீனாவின் ரசிகர்கள் இணையத்தை விமர்சனங்களால் பந்தாடத் தொடங்கினர்.

செரீனாவின் நீண்ட கால ஸ்பான்சரான Nike, செரீனாவின் படம் ஒன்றை வெளியிட்டு அவரது உடையிலிருந்து நீங்கள் சூப்பர் ஹீரோவை வேண்டுமானால் அகற்றலாம், ஆனால் அவருடைய சூப்பர் பவரை அகற்ற முடியாது என்று ஒரு செய்தியையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், பிரெஞ்சு டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவரான Bernard Giudicelli மிகவும் அருமையான ஒரு நபர், அவரிடம் பேசுவது எளிது, அதனால் நாங்கள் பேசி ஒரு நல்ல புரிதலுக்கு வர முடியும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் செரீனா.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers