11 வயது சிறுவன் கொடூர கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தடயம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

20 ஆண்டுகளுக்கு முன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுவன் கொலை வழக்கில் முக்கிய தடயம் ஒன்று கிடைத்துள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த Nicky Verstappen என்னும் சிறுவன் காணாமல் போய் ஒரு நாள் கழித்து அவனது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் அவன் கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தெரியவந்தது.

தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் அவனைக் கொலை செய்த நபரை பொலிசாரால் பிடிக்க இயலவில்லை.

20 ஆண்டுகளுக்கு பிறகு Nickyயின் கொலை வழக்கில் முக்கிய தடயம் கிடைத்துள்ளது.

தடயவியல் ஆய்வுகள் நன்கு முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில் DNA தடயவியலின் அடிப்படையில் பொலிசார் Jos Brech (55) என்னும் நபர் Nickyயை கொலை செய்திருக்கலாம் என்னும் முடிவுக்கு வந்துள்ளனர். அவன் கடைசியாக பிரான்சில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

Nickyயின் உடையிலிருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகளை வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த DNA Nicky வாழ்ந்த இடத்திலுள்ள யாருடைய DNAவுடனாவது ஒத்துப் போகிறதா என்று சோதிக்கப்பட்டது.

சுமார் 16,000 பேரின் DNA மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் Nickyயின் DNAவுடன் எந்த மாதிரியும் ஒத்துப்போகவில்லை.

ஆனால் கொலை நடந்த நேரத்தில் சாட்சியமாக விசாரிக்கப்பட்ட Jos Brech, தனது DNA மாதிரியைக் கொடுக்கவில்லை என்பதால் பொலிசாரிடம் இருந்த DNA மாதிரிகளில் Jos Brechஇன் DNA மாதிரி இல்லை.

இதற்கிடையில் ஏப்ரல் மாதத்திலிருந்து Jos Brechஐக் காணவில்லை என அவனது குடும்பத்தினர் பொலிசில் புகாரளித்தனர்.

பொலிசாரின் கவனம் அவன் மீது திரும்ப, அவர்கள் Jos Brechஇன் அறையை சோதனையிட்டனர்.

அவனுடைய பொருட்களிலிருந்து கிடைத்த அவனது DNA மாதிரி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில் அவனது DNA மாதிரி, Nickyயின் உடையிலிருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரியுடன் ஒத்துப்போவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மலையேற்றத்தில் வல்லவனும், அசாதாரண சூழல்களில் வாழும் பயிற்சியைப் பெற்றவனுமான Jos Brech, கடைசியாக மலைப்பகுதியில் நடைப்பயணம் செல்வதாக கூறிச் சென்றதாக அவனது குடும்பத்தார் தெரிவித்தனர்.

இதனால் Jos Brech பிரான்ஸ் நாட்டின் மலைப்பகுதிகளில் மறைந்திருக்கலாம் என்ற முடிவிற்கு பொலிசார் வந்துள்ளனர்.

Jos Brechஐ கைது செய்வதற்காக ஐரோப்பிய வாரண்ட் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...