பிரான்சில் தொடரும் அகதிகள் பிரச்சினை: தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் உதவிக் குழுக்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் எல்லையில் அமைந்திருக்கும் நகரமான கலாயிஸில் தொடர்ந்து பொலிசார் உதவிக் குழுக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாக நான்கு தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

வீடற்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதை தடுப்பதற்காக இவ்வாறு பொலிசார் நடந்து கொள்வதாக அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கலாயிஸ் பொலிசார் தொடர்ந்து அகதிகளை மோசமாக நடத்துவதாக புகார்கள் வருவது வழக்கமான ஒன்றாக மாறி விட்ட நிலையில் தற்போது முதன்முறையாக தன்னார்வலர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Help Refugees, l'Auberge des migrants, Utopia 56 மற்றும் Refugee Infobus ஆகிய நான்கு தொண்டு நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் நவம்பர் 2017க்கும் ஜூலை 2018க்கும் இடையில் தன்னார்வலர்கள் 666 முறை அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே தன்னார்வலர்கள் அடையாள அட்டைகளை காட்டுமாறு வற்புறுத்தப்படுதல், கைது செய்யப்படுதல், மோசமான வார்த்தைகளால் திட்டப்படுதல், சில சமயங்களில் அடிக்கப்படுதல் என பல வகையில் அவமானப்படுத்தப்படுவதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்கும் இடங்களில் கலவரத் தடுப்பு பொலிசார் தன்னார்வலர்களை தரையில் விழத்தள்ளுவது, அவர்களது போன்களை பிடுங்குவது, உணவு வழங்க விடாமல் துரத்துவது என பொலிசார் வன்முறையில் ஈடுபட்ட 37 சம்பவங்களை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

இந்நிலையில் கலாயிஸ் மேயரான Natacha Bouchart வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகைய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் கலாயிஸில் புலம்பெயர்ந்தோர் பிரச்சினையை கட்டுப்படுத்த பொலிசார் கடுமையாக பாடு படும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் பிரச்சினையை பெரிது படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் பிரான்சுக்குள் மக்கள் நுழைவதாக தெரிவித்துள்ள தொண்டு நிறுவனங்கள் தற்போது 350இலிருந்து 400 புலம்பெயர்ந்தோர் தங்குமிடமின்றி கலாயிஸ் தெருக்களில் உறங்குவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers