ஈபிள் கோபுரத்தைச் சுற்றி சுவர் எழுப்பும் பிரான்ஸ்: பாதுகாப்பு கருதி நடவடிக்கை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
363Shares

தீவிரவாதத் தாக்குதலிலிருந்து ஈபிள் கோபுரத்தைப் பாதுகாப்பதற்காக அதைச் சுற்றிலும் குண்டு துளைக்காத சுவர்கள் மற்றும் உலோக வேலிகளை அமைக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே ஜூன் 2016இல் அமைக்கப்பட்ட தற்காலிக தடுப்பு அமைப்புகளுக்கு பதிலாக 6.5 சென்றிமீற்றர் தடிமனுள்ள கண்ணாடிச் சுவர்களும் உலோக வேலியும் அமைக்கப்படும்.

வாகனங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவதைத் தவிர்ப்பதற்காக ஈபிள் கோபுரத்தைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் தடுப்பு தூண்களும் அமைக்கப்பட உள்ளன.

சமீப காலமாக நிகழ்ந்து வரும் தீவிரவாத தாக்குதல்களிலிருந்து சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதை உறுதி செய்யும் வகையில் 35 மில்லியன் யூரோக்கள் செலவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

324 மீற்றர் உயரமுள்ள ஈபிள் கோபுரத்தைக் காண ஆண்டுக்கு ஏழு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

ஜூலை மாதம் 14ஆம் திகதி பிரான்சில் Bastille Day கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அதற்குமுன் பெரும்பாலான வேலைகள் முடிக்கப்படும்.

அந்த நாளில் வழக்கமாக ஈபிள் கோபுரத்தில் மாபெரும் வாண வேடிக்கைகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்