அமெரிக்கா ஒன்றும் உலகின் பொலிஸ்காரர் இல்லை: கொந்தளிக்கும் பிரான்ஸ்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அலட்சியப்படுத்தும் வகையில் ஈரானுடனான ஒப்பந்தத்தை தக்கவைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சர், அமெரிக்கா தொடர்ந்து உலகின் பொருளாதார பொலிஸ்காரர்போல செயல்பட முடியாது என காட்டமாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கொள்கைகள் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளை தண்டிக்கும் வகையிலும் சீனா போன்ற பெரிய நாடுகளுக்கு சாதகமாகவும் உள்ளதாக பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சரான Bruno Le Maire தெரிவித்தார்.

ஈரான் அதிபர் இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார் என்று கூறிய Le Maire, பிரான்ஸ் ஈரானுடனான ஒப்பந்தத்தில் தொடர விரும்புவதாகவும், இந்த ஒப்பந்தத்தை காக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது அணு ஆயுத செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்வதற்கு சம்மதித்திருந்தது, மேலும் அதன் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கும் நடவடிக்கைக்காக பதிலுக்கு, சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிக்கவும் ஈரான் சம்மதம் தெரிவித்திருந்தது.

ஆனால் அது ஒரு மோசமான ஒப்பந்தம் என்று விமர்சித்த டிரம்ப், ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக இம்மாதத்தின் தொடக்கத்தில் அறிவித்தார்.

அதுமட்டுமின்றி மீண்டும் ஈரான் மீது அதிக தடைகளை விதிக்கப்போவதாகவும் அவர் அறிவித்ததையடுத்து ஒப்பந்தம் மோசமான நிலையை அடைந்தது.

இருந்தாலும் பிரான்ஸ் ஒப்பந்தத்தில் நீடிக்க விரும்புவதாக பிரான்ஸ் நிதியமைச்சர் Le Maire தெரிவித்துள்ளார்.

இது பாதுகாப்பு தொடர்பான விடயம்; இந்த ஒப்பந்தம் ஈரான் ஒரு அணு ஆயுதத்தை உருவாக்குவதிலிருந்து அதை தடுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டாவது காரணம்பொருளாதாரம்; 2015 முதல் ஈரானுடனான பொருளாதார உறவுகள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன, ஒப்பந்தம் கையெழுத்தானபின் பிரான்சின் ஏற்றுமதி 500 மில்லியன் யூரோக்களிலிருந்து 1.5 பில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளது.

இதனால்தான் நாங்கள் ஒப்பந்தத்தில் நீடிக்க விரும்புகிறோம். பிரான்சுக்கும் ஈரான் நிறுவனங்களுக்குமிடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களை நாங்கள் காப்பாற்ற விரும்புகிறோம்.

அதேபோல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல பிரான்சும் மற்ற ஐரோப்பிய நாடுகளும்தொடர்ந்து ஈரானுடன் முறையான வர்த்தகம் செய்ய இயலும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல, அமெரிக்கா உலகின் பொருளாதார பொலிஸ்காரர் போல நடந்து கொள்ள வேண்டாம் என்றும் பிரான்ஸ் நிதியமைச்சர் Le Maire தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்