பிரான்ஸை எரிச்சலூட்டிய டிரம்ப்: கொதித்தெழுந்த பிரான்ஸ் அரசியல் வட்டாரம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பொதுமக்கள் யாரிடமாவது துப்பாக்கி இருந்திருந்தால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கும் என கூறியுள்ளது பிரான்ஸ் நாட்டு அரசியல்வாதிகளை கடுங்கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.

தீவிரவாதிகள் ஒவ்வொருவரையாக கூப்பிட்டு சுட்டுக் கொன்றதாக குறிப்பிட்ட டிரம்ப் தனது கையையே துப்பாக்கிபோல் காட்டி, சுடுவதுபோல் செய்து காட்டினார்.

பிரான்ஸின் துப்பாக்கி விதிகளை விமர்சிப்பதுபோல் அமைந்த அவரது பேச்சு பிரான்ஸ் அரசியல்வாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்களுக்கு பிரான்ஸ் தனது மறுப்பைத் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் நினைவுகள்

மதிக்கப்படவேண்டும் என்றும் பிரான்ஸின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டபோது பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியாக இருந்த François Hollande, டிரம்பின் கருத்துகள் அவமானத்திற்குரியவைகள் என்றும் அவை பிரான்ஸைப் பற்றிய அவரது எண்ணத்தை வெளிப்படுத்துகின்றன என்றும் கூறியுள்ளார்.

அதே காலகட்டத்தில் பிரதமராக இருந்த Manuel Valls, அநாகரீகமான மற்றும் யோக்கிதை அல்லாத கருத்துகள், வேறு என்ன சொல்ல என்று ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

“ஒவ்வொரு நாட்டுக்கும் பிற நாடுகளைப் போலவே ஆயுதங்களை வைத்திருப்பது குறித்த தனது சட்டங்களை முடிவு செய்யும் சுதந்திரம் உள்ளது, என்று கூறியுள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம், ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட நாடு என்பதில் பிரான்ஸ் பெருமையடைவதாக தெரிவித்துள்ளது.

பிரான்ஸை விமர்சித்ததுபோலவே லண்டனில் அதிகரித்துள்ள கத்தி தாக்குதல்களையும் விமர்சித்த டிரம்ப், அங்கு தாக்குதல் நடைபெற்ற மருத்துவமனை ஒன்று போர்க்களம்போல் காட்சியளித்ததாகத் தெரிவித்திருந்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்திருந்த லண்டனின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கத்தி வன்முறையுடன் போட்டிபோட துப்பாக்கிகளைப் பயன்படுத்துமாறு கூறியுள்ளது வேடிக்கையானது என்று பதிலடி கொடுத்திருந்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers