யோகர்ட் ஆபத்து: பிரான்ஸ் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் மக்கள் பெரிதும் விரும்பும் யோகர்ட்டும் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம் என்று பிரான்ஸ் தர மேற்பார்வை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் யோகர்ட்டில் பதப்படுத்துவதற்காகவும் சுவையூட்டுவதற்காகவும் பல வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுவதால் அவை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் என்று பிரான்ஸ் தர மேற்பார்வை அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.

‘60 millions de consommateurs’ என்னும் தர மேற்பார்வை அமைப்பு பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் 100 வெவ்வேறு உணவுகளில் எவ்வளவு சர்க்கரை, கொழுப்பு, உப்பு, நைட்ரேட்டுகள், சுவையூட்டும் மற்றும் பதப்படுத்தும் பொருட்கள், மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவை உள்ளன என்று பரிசோதித்து “நாம் உண்ணும் நச்சுப் பொருட்கள் கொண்ட உணவு வகைகள்” என்னும் தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த பரிசோதனையின் முடிவுகளில் சில மோசமானவையாக இருந்தன.

பெரிய உணவு பிராண்டுகள் பல ஆரோக்கியமான உணவுகள் குறித்து பேசினாலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் இன்னும் நடை முறையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

எல்லா கடைகளிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது, அந்த வகையில் யோகர்ட்டும் தப்பவில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

பிரான்ஸில் யோகர்ட்டில் பதப்படுத்தும் மற்றும் சுவையூட்டும் வேதிப்பொருட்களை சேர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

1988 சட்டம் ஒன்றின்படி, வாசனையூட்டும் பொருட்கள் மற்றும் சர்க்கரை அல்லது குறிப்பிட்ட வாசனையைக் கொடுக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமே யோகர்ட்டுடன் சேர்க்கப்படலாம், அதுவும் யோகர்ட்டின் எடையில் 30% மட்டுமே சேர்க்கப்படலாம்.

இந்த சட்டத்தில் குறிப்பிடப்படாத எதையும் சேர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது, பதப்படுத்தும் மற்றும் சுவையூட்டும் பொருட்கள் உணவுப் பொருட்கள் அல்லாததால் அவையும் தடை செய்யப்பட்டவையே.

ஆனால் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கென்று விதிகளை வகுத்துக் கொள்கின்றன.

அவை நிறமிகள், இனிப்பூட்டும் பொருட்கள் மற்றும் பிற பதப்படுத்தும் மற்றும் சுவையூட்டும் பொருட்களின் கலவையை யோகர்ட்டில் சேர்க்கின்றன.

பழக்கூழை யோகர்ட்டுடன் சேர்க்கும் நிறுவனம் ஒன்றின் யோகர்ட்டில் 12 வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

அதில் அந்த நிறுவனம் வேதிப்பொருட்கள் பழக்கூழில்தான் சேர்க்கப்பட்டதாகவும், யோகர்ட்டில் சேர்க்கப்படவில்லை என்றும் விளக்கம் வேறு கொடுத்திருந்தது.

சராசரியாக பிரான்ஸ் நாட்டவரில் ஒருவர் ஓராண்டிற்கு 150 டின்கள் யோகர்ட் உண்ணுகிறார்.

முன்பு யோகர்ட் விவசாயிகளால் தயாரிக்கப்பட்டு வந்தது, பின்னர் 1960களில் பெரிய நிறுவனங்கள் யோகர்ட் தயாரிப்பை கையில் எடுத்துக் கொண்டன.

எனவே எல்லாமே வியாபார நோக்கமாகி விட்ட நிலையில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் யோகர்ட்டும் தீங்கு விளைவிப்பதாக மாறியதில் வியப்பேதுமில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்