அகதிகள் விடயத்தில் பிரான்ஸ் வேண்டுமென்றே இதை செய்கிறது! பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தனியாக பயணம் செய்யும் அகதிச் சிறுவர்களின் வயதை வேண்டுமென்றே மாற்றி பதிவு செய்து அவர்களை இத்தாலிக்கு திரும்ப அனுப்புவதாக பிரான்ஸ் பொலிசார் மீது ஏழு இத்தாலிய தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

ஐரோப்பிய கமிஷன் மற்றும் இத்தாலியின் உள்துறை அமைச்சகத்துக்கு அவை அனுப்பியுள்ள முறையீட்டு மனு ஒன்றில் பிறந்த திகதி மாற்றப்பட்ட இரண்டு சிறுவர்களின் ஆவணங்களை ஆதாரமாக அவை காட்டியுள்ளன.

இத்தாலியின் எல்லையிலுள்ள Ventimiglia நகரில் தொண்டு நிறுவனத்தின் அலுவலர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இரண்டு அகதிச் சிறுவர்கள் பிரான்ஸ் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். “அவர்களது ஆவணங்களில் பொலிசார் வேண்டுமென்றே பிறந்த திகதியை மாற்றி எழுதியதை நாங்கள் கண்டோம், அவர்கள் இத்தாலிக்கு திருப்பி அனுப்பப்படுவதை நாங்கள் தடுத்ததும் பிரான்ஸ் பொலிசார் அவர்களை பிரான்ஸிற்குள் அனுமதித்தனர்” என்று தொண்டு நிறுவன ஊழியர்களில் ஒருவரான Daniela Ziterosa கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின்படி தனியாக வரும் அகதிச் சிறுவர்கள் பாதுகாக்கப்படுவதோடு, ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டில் புகலிடம் தேடும் அவர்கள் தங்கள் பெற்றோர் இருக்கும் இன்னொரு நாட்டிற்கு செல்லலாம்.

இதனால் தொண்டு நிறுவனங்களின் குற்றச்சாட்டுக்கு இத்தாலியும் இலக்காகியுள்ளது.

இத்தாலி அகதிச் சிறுவர்கள் தங்களது குடும்பத்துடன் இணைவதற்கான போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் பிள்ளைகளை அலைய விடுவதன் மூலம் அந்தப் பிள்ளைகள் தாங்களாகவே பயணம் மேற்கொள்ள அது வழி வகுப்பதாக இத்தாலி மீதும் குற்றம் சாட்டியுள்ளன தொண்டு நிறுவனங்கள்.

இத்தாலியோ அகதிகளை எங்களுக்கு நன்றாகத் தெரியும், பிரான்ஸ் பொலிசாருக்கு அவர்களது வயது குறித்த சந்தேகம் இருந்தால் எங்களிடம் சரி பார்த்துக் கொள்ளலாம்.

அவர்கள் உண்மையிலேயே சிறுவர்கள் என்று கண்டறியப்பட்டால் அவர்களை நாட்டிற்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும், திருப்பி அனுப்பக்கூடாது என்று கூறியுள்ளனர்.

இது குறித்து பிரான்ஸ் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers