பாரீஸ் மெட்ரோ ரயிலில் பிக் பாக்கெட் அடிப்பவர்கள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்துள்ள நிலையில், சிறுவர்கள் போனை பறித்துக் கொண்டு, ஓடும் ரயிலிலிருந்து குதித்து தப்பி ஓடும் சம்பவங்கள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர், தனது ஐபோனில் இ-மெயில்களைப் பார்வையிட்டவாறே காதுகளில் மாட்டப்பட்ட இயர் போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றபோது, ஒரு தந்தையும் மகளும் ஏறினார்கள். கூடவே ஒரு சிறுவனும் ஏறினான்.
அந்தப் பையன் அந்த மனிதரின் மகன் என்று நினைத்தார் அந்தப் பத்திரிகையாளர்.
அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. ரயிலில் கதவுகள் திறந்தன.
சரியாக அவை மூடப்போகும் நேரத்தில் அந்த சிறுவன் எழுந்தான். டக்கென்று அந்த பத்திரிகையாளரின் கையிலிருந்த மொபைல் போனைப் பறித்து கொண்டு ரயிலின் மூடும் கதவுகளுக்கு நடுவே வெளியே குதித்தான். பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் சத்தமிட்டார்கள்.
எழுந்த பத்திரிகையாளர் அவனை பிடிக்க முயன்றார். அதற்குள் அவன் குதித்து ஓடி விட்டான். அவன் எங்கு போகிறான் என்று ரயிலின் கண்ணாடிக் கதவுகள் வழியே தலையைச் சாய்த்துப் பார்த்தார் அவர்.
அங்கே அவனுக்காகக் காத்திருந்த ஒரு கூட்டத்துடன் அவன் இணைந்து கொள்வதைக் கண்டார் அவர்.
அதிர்ச்சி மாறாமல் இருக்கையில் வந்தமர்ந்த அவரிடம், தனக்கும் இதற்கு முன்பு இத்தகைய சம்பவம் நடந்துள்ளதாக அவரது சக பயணி ஒருவர் கூறியபோதுதான் இம்மாதிரி சிறுவர்களின் மொபைல் திருட்டுக்கு இலக்கான முதல் நபர் தானல்ல என்பதையும் பிரான்ஸ் ரயில்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதையும் அவர் புரிந்து கொண்டார்