இரண்டாவது நாளாக ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ஸ்தம்பித்த பிரான்ஸ்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இரண்டாவது நாளாக ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால் பிரான்ஸ் நாடே ஸ்தம்பித்தது.

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் இரண்டாவது நாளான இன்று பெரும்பாலான ரயில்கள் ஓடாததால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

“கருப்பு செவ்வாய்” என்று பத்திரிகைகளால் அழைக்கப்பட்ட நேற்றைய தினத்தைப் போலவே இன்றும் அதிவேக ரயில்களில் 7 ல் 1 ம், உள்ளூர் ரயில்களில் 5 ல் 1 மட்டுமே இயக்கப்பட்டது.

பிரான்ஸ் ஜனாதிபதி பதவியேற்று 11 மாதங்களே ஆன நிலையில் ரயில்வே ஊழியர்கள் மட்டுமின்றி விமான சேவை பணியாளர்கள், குப்பை அகற்றுபவர்கள் மற்றும் சில மின்வாரிய ஊழியர்களும் கூட இணைந்து கொண்ட இந்த வேலை நிறுத்தம் அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 28 வரை ஐந்து வேலை நாட்களில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் தொடர ரயில்வே ஊழியர்கள் முடிவெடுத்துள்ளதால் பிரான்ஸில் தினமும் ரயில் சேவையைப் பயன்படுத்தும் 4.5 மில்லியன் பயணிகளுக்கு பிரச்சினைதான்.

ரயில்வே வேலை நிறுத்தத்தின் இரண்டாவது நாளான இன்று பயணிகள் சாலை வழியாக பயணிக்கத் தொடங்கினார்கள்.

இதனால் சாலைகளில் 350 கிலோமீற்றர்கள் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பல இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். 100 பேர் கொண்ட ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது.

இது தொடர்பாக பொலிசார் ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்