ஜேர்மனியில் புதிய கூட்டணி ஆட்சி: மெர்க்கலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வாழ்த்து

Report Print Harishan in பிரான்ஸ்

ஜேர்மனியில் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையில் அமையவிருக்கும் புதிய கூட்டணி ஆட்சிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறித்துவ ஷோசலிச யூனியன் கட்சி 33 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது.

ஆனால் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லாததால் ஏஞ்சலா மெர்க்கல் நிர்வாகத்தில் இடைக்கால அரசு நடைபெற்று வந்தது.

இதனால் ஜேர்மனி பொருளாதாரம் மட்டுமல்லாமல் ஐரோப்பிய கண்டத்தின் பொருளாதாரத்திலேயே கடும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதற்கிடையே நிலையான ஆட்சி அமைப்பதற்கு போதிய ஆதரவை வழங்கிடுமாறு ஷோசியல் குடியரசு கட்சியுடன் மெர்க்கல் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

அந்த பேச்சுவார்த்தையின் வெற்றியாக ஏஞ்சலா மெர்க்கல் தலைமையை ஏற்று ஷோசியல் குடியரசு கட்சி உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இன்று அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவில் மொத்தமுள்ள 463,723 உறுப்பினர்களில் 66.02 சதவிகித உறுப்பினர்கள் மெர்க்கலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில், புதிய கூட்டணி ஆட்சியமைக்க தீர்மானித்துள்ள ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் ஷோசியல் குடியரசு கட்சியின் இடைக்கால தலைவர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகியோருக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, இந்த முடிவு ஐரோப்பா கண்டத்துக்கே மகிழ்ச்சியான செய்தி என்றும் புதிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஜேர்மனியும் பிரான்ஸும் தொடர்ந்து பணியாற்றும் என்றும் தனது வாழ்த்து செய்தியில் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்