பாரீஸ் தெருக்களில் உறங்கும் 3000 பேர்: வெளியான ஆய்வு முடிவுகள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸில் கடந்த வியாழனன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் 3000 வீடற்றோர் தெருக்களில் படுத்து உறங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பாரீஸைச் சேர்ந்த 1700 தன்னார்வலர்களும், 300 அலுவலர்களும் மேற்கொண்ட இந்த ஆய்வில் பங்கு பெற்றவர்கள் தெருத்தெருவாகச் சென்று தெருக்களில் உறங்கும் பைகளுக்குள்ளும், வீட்டு வாசல்களிலும் கூடாரங்களிலும் உறங்குவோரை தனித்தனியாக எண்ணி இந்த புள்ளிவிவரத்தை தயார் செய்தனர்.

ஆய்வின் முடிவுகளை வெளியிட்ட துணை மேயர் Bruno Julliard, ”இந்த எண்ணிக்கை முழுமையானது அல்ல என்று கூறியுள்ளார். ஏனென்றால் பொதுவாக வீடற்றோர் உறங்கும் இடங்களான கார் பார்க்கிங்குகளும், கட்டிடங்களின் படிக்கட்டுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

கூடாரங்களுக்குள் எத்தனை பேர் உறங்கினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது, காரணம் நாங்கள் அவற்றைத் திறந்து பார்க்கவில்லை” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தப் பிரச்சினை குறித்து பேசிய அதிபர் Emmanuel Macron, 2017ஆம் ஆண்டுக்குள் பிரான்சு முழுவதிலும் தெருக்களில் உறங்குவோர் குறித்த பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதை அவரே கடந்த மாதம் ஒப்புக்கொண்டார்.

நாகரீகத்தின் உச்சம் என பிற நாடுகள் கருதும் பாரீஸுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், தலைநகரின் சில பகுதிகளில் நிலவும் வறுமையைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.

இதற்கிடையில் நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத மேக்ரானின் கட்சியினர் இரண்டுபேர் சாலையில் உறங்குவோர் குறித்து தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

நகர விவகாரங்கள் துறை அமைச்சர் Julien Denormandie கடந்த மாதம் பாரீஸில் வெறும் 50 பேர்தான் தெருக்களில் உறங்குகிறார்கள் என்று தெரிவித்த கருத்து தொண்டு நிறுவனங்களின் கோபத்தைத் தூண்டிவிட்டுள்ளது.

சில நாட்களுக்குப் பின் மேக்ரானின் கட்சியைச் சேர்ந்த Sylvain Maillard என்பவர் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினாற்போல ”சிலர் பனி பெய்யும்போது கூட விரும்பிதான் தெருக்களில் படுத்து உறங்குகிறார்கள்” என்று கூறியிருந்தார்.

சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் மேக்ரான் அரசு 13000 அவசர கால தங்குமிடங்களை திறந்துள்ளதாகக் கூறியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers