5 ஆண்டுகளாக பாலியல் அடிமை: 12 வயது சிறுமியை 20 வயதாக்கிய பிரான்ஸ் நபர்

Report Print Kabilan in பிரான்ஸ்

புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டு முதியவர் ஒருவர், ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுத்து 5 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 60 வயது முதியவர் தியாரி கக்னர், இவர் புதுச்சேரியில் உள்ள கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார்.

இவருடன் ஒடிசாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும், அவரது 12 வயது மகளும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தியாரி குறித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும், ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுத்து 12 வயது சிறுமியை, 20 வயதுடைய பெரிய பெண்ணாக மாற்றியுள்ளதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அமைப்பு ஆகியோருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று புகார் அனுப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவின் தலைவி வித்யா ராம்குமார், முதியவர் தங்கியிருந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளார்.

அப்போது, சிறுமி நடந்த விவரங்களை தெரிவித்திருக்கிறாள். ஆனால், தியாரி கக்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றும், அவளை தாம் தத்து எடுத்து வளர்த்து வருவதாகவும் தெரித்துள்ளார்.

மேலும், முத்தமிடுவது பிரான்ஸ் கலாச்சாரத்தின்படி தவறு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும் சிறுமியின் தாய், அந்த முதியவர் சிறுமியை தத்து எடுக்கவில்லை என்றும், தங்களுக்கு மருத்துவ உதவிகளை செய்வதாகக் கூறியே இங்கு தங்க வைத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த தகவலின் அடிப்படையில், பிரான்ஸ் நாட்டுக்கு தப்பிச் செல்ல இருந்த அந்த முதியவரை, குழந்தைகள் நல அமைப்பினர் பொலிசாரின் உதவியுடன் பிடித்துள்ளனர். மேலும், அவரின் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்