பிரித்தானிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பாரிஸ் விமான நிலையத்தில் பரபரப்பு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பாரிஸ் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள Charles de Gaulle விமான நிலையத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விமானமானது லண்டன் புறப்பட தயாராக இருந்த நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பயணிகள் அனைவரையும் வெளியேற்றிய அதிகாரிகள், விமானத்தை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி பயணிகள் ஒவ்வொருவரையும் கடுமையான சோதனைக்கு பின்னரே விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.

மிரட்டல் விடுத்த நபர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்திய பின்னர், அச்சுறுத்தல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் தீவிர சோதனை மேற்கொள்வதாக பார்வையாளர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலில் விமானத்தில் கோளாறு இருப்பதாகவும் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் எனவும் விமானி தெரிவித்துள்ளார். பின்னர் விமானத்தை விமான நிலையத்தின் வேறு பகுதிக்கு மாற்றவிருப்பதாகவும் பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பயங்கரவாத தடுப்பு பொலிசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட பல குழுக்கள் விமானத்தை சுற்றி வளைத்ததாகவும், தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தியதாகவும் பார்வையாளர்கள் சிலர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

தொடர் தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து பிரான்சில் அவசர நிலை பிரகடனத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்