மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு தெரிவான தமிழச்சி: குவியும் வாழ்த்துக்கள்

Report Print Kabilan in கால்பந்து

பிஃபா 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பெண்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியம்மாள் இடம்பெற்றுள்ளார்.

தமிழகத்தின் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் பாலமுருகன். விசைத்தறி தொழிலாளியான இவரது மகள் மாரியம்மாள். நாமக்கல்லில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் இவருக்கு, இளம் வயதில் இருந்தே கால்பந்தாட்டத்தின் மீது ஆவல் இருந்துள்ளது.

அதன் விளைவாக நாமக்கல்லில் உள்ள கால்பந்தாட்ட விளையாட்டு விடுதியில் சேர்ந்தார் மாரியம்மாள். துவக்கத்தில் மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த இவர், மாநில அளவிலான அணியில் இடம்பிடித்தார்.

இதன்மூலம் தமிழ்நாடு அணியில் பங்கேற்று, தேசிய அளவிலான போட்டிகளில் பல வெற்றிகள் பெற காரணமாக அமைந்தார். இந்நிலையில், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிஃபா உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மாரியம்மாள் இடம்பிடித்துள்ளார். இந்த தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாரியம்மாள் கூறுகையில், ‘எனது அண்ணன் இளம் வயது முதலே கால்பந்தாட்ட வீரராக விளங்கியதை கண்டு, எனக்கு கால்பந்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நான் நாமக்கல்லில் உள்ள தமிழக அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில், கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி பெற்று விளையாடி வருகிறேன். மேலும், எனது பயிற்சியாளர் கோகிலா அளித்த பல்வேறு தொழில்நுட்ப பயிற்சியின் வாயிலாக மாவட்ட, மாநில அளவில் சிறப்பாக விளையாடினேன்.

அதன் விளைவாக அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்தாட்ட போட்டிகளில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

நான் தொடர்ந்து சிறப்பான பயிற்சி மேற்கொண்டு, இந்தியாவிற்காக சிறப்பாக விளையாடுவேன் என்று நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்