தமது அபார ஆட்டத்தால் காலிறுதிக்கு அதிரடியாக நுழைந்தது சென்.பற்றிக்ஸ் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

வாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி, முன்கள வீரர்களின் சிறப்பான நகர்வுகள் மூலம் கோல் மழை பொழிந்து காலிறுதிக்குள் நுழைந்தது.

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் அனுமதியுடன், பப்பரே நிறுவனத்தால் இலங்கை பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவு கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் பப்பரே சம்பியன்சிப் சுற்றுப்போட்டியொன்று நடத்தப்பட்டு வருகின்றது.

தேசிய ரீதியில் 20 அணிகள் பங்குபற்றும் இந்தச் சுற்றுப்போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் உள்ளடங்கியுள்ள 5 அணிகளுக்கிடையில் லீக் முறையில் முதற்சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் முதலிரு இடங்களையும் பெறும் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும்.

அந்த வகையில், குழு 'பி'-யில் இடம்பிடித்திருந்த யாழ்ப்பாணம் பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் கட்டுனேரி சென்.செபஸ்ரியன் கல்லூரி அணிக்கும் இடையிலான போட்டி வென்னப்புவ அல்பேர்ட் எப்.பீரிஸ் விளையாட்டு மைதானத்தில் 9 ஆம் திகதி நடைபெற்றது.

ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டிகளில் 1 இல் வெற்றியும், 2 போட்டிகளை சமநிலையிலும் முடித்திருந்த சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி, இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே, காலிறுதிக்கு நுழைய முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.

எதிரணியான செபஸ்ரியன் கல்லூரி 1 போட்டியில் வெற்றிபெற்று, இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து சுற்றிலிருந்து ஏற்கனவே வெளியேறும் நிலையிருந்தது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதல் சென்.பற்றிக்ஸ் அணியின் ஆட்டம் தூள் பறந்தது.

பற்றிக்ஸின் முன்கள வீரர்களை செபஸ்ரியன் கல்லூரி பின்கள வீரர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. முதல் பாதியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 3 கோல்களைப் போட்டது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும், சென்.பற்றிக்ஸ் அணி அபாரமாகச் செயற்பட்டு, மேலும் 3 கோல்களைப் போட்டது.

முடிவில் சென்.பற்றிக்ஸ் அணி, 06:00 என்ற கோல்கள் கணக்கில் வென்றது. சென்.பற்றிக்ஸ் அணி சார்பாக ஹெயின்ஸ் 3, சாம்சன் 2 மற்றும் சாந்தன் 1 கோலையும் போட்டனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்