தண்ணி காட்டிய துனீஷியா: கடைசி நேரத்தில் நிம்மதி பெருமூச்சு விட்ட இங்கிலாந்து

Report Print Arbin Arbin in கால்பந்து
290Shares

ஃபிபா உலகக் கிண்ணம் ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கோலடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் துனீஷியாவை வென்றது முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து.

இன்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என அறிமுக அணியான பனாமாவை வென்றது. அதற்கடுத்து நடந்த ஆட்டத்தில் துனீஷியாவை 2-1 என இங்கிலாந்து வென்றது.

உலகக் கிண்ணம் தொடரில் இதுவரை வென்றுள்ள 8 நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, 1966ல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கிண்ணம் தொடரில் சாம்பியனானது.

அதன்பிறகு கிண்ணத்தை தொட்டுவிடும் தூரத்தைக் கூட எட்டவில்லை. உலகக் கிண்ணம் தொடரில் விளையாடும் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனீஷியா, தகுதிச் சுற்று ஆட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தது.

இதுவரை உலகக் கிண்ணம் தொடரில் துனீஷியா 1978, 1998, 2002, 2006 ஆம் ஆண்டுகளில் விளையாடியது. ஆனால் முதல் பிரிவு சுற்று ஆட்டங்களிலேயே வெளியேறியது.

பரபரப்பான ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஹாரி கேன் கோலடிக்க இங்கிலாந்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் துனீஷியாவின் சாசி பெனால்டி வாய்ப்பை கோலாக்கி சமநிலையை உருவாக்கினார்.

இந்த ஆட்டத்தில் துவக்கத்தில் இருந்தே இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. கிட்டத்தட்ட 60 சதவீத நேரம் பந்து அந்த அணியின் வசமே இருந்தது.

கோலடிக்கும் வாய்ப்பும் அந்த அணிக்கு 18 முறை கிடைத்தது. ஆனால், கிடைத்த வாய்ப்புகளை இங்கிலாந்து சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் துனீஷியா அணியும் விடாக்கொண்டனாக இங்கிலாந்தின் கோல் முயற்சிகளை தடுத்தது.

வழக்கமான ஆட்ட நேர இறுதியில் 1-1 என சமநிலையில் இருந்தன. டிராவில் முடிவடையும் என்று நினைத்த நேரத்தில், கூடுதல் நேரத்தில் ஹாரி கேன் மற்றொரு கோலடிக்க, இங்கிலாந்து திரில் வெற்றி பெற்றது.

உலகக் கிண்ணம் தொடரில் இங்கிலாந்து இதுவரை விளையாடிய 62 ஆட்டங்களில் 11 ஆட்டங்களில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

வேறு எந்த அணிக்கும் இல்லாத விரும்பப்படாத சாதனை இது. மட்டுமின்றி உலகக் கிண்ணம் தொடரில் கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே இங்கிலாந்து வென்றுள்ளது.

4ல் சமன், 3ல் தோல்வி அடைந்தது. 1978ல் மெக்சிகோவுக்கு எதிராக துனீஷியா தனது முதல் வெற்றியை சுவைத்தது.

அதன்பிறகு, இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்