எதிர்காலத்தில் கடும் சவாலை சந்திக்கபோகும் கால்பந்தாட்ட உலகம்!

Report Print Samaran Samaran in கால்பந்து

இந்த வருடத்துக்கான சிறந்த உதைபந்தாட்ட வீரருக்கான தங்கப்பந்து விருதை கிறிஸ்டியானோ றொனால்டோ வென்றதன் மூலம் 5 தடவைகள் இவ்விருதைப் பெற்ற மெஸியின் சாதனையை அவர் சமப்படுத்தி உள்ளார்.

மெஸ்ஸி இரண்டாம் இடம்பெற எதிர்பார்த்தது போல் நெய்மரால் மூன்றாமிடத்தையே பெற முடிந்தது. 2008 ஆம் ஆண்டில் இருந்து இந்த விருதை மெஸ்ஸியும் றொனால்டோவுமே மாறிமாறிப் பெற்றுவரும் நிலையில் இவர்கள் இருவரும் களத்தில் இருக்கும் வரை நெய்மரால் இந்தவிருதைப் பெற முடியாது என்ற கருத்தே ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

நெய்மர் பார்சிலோனா கழகத்தைவிட்டு பிரான்ஸின் PSG கழகத்திற்கு மாறியதில் இதுவும் ஒரு காரணமாகக் கருதப்பட்டது.

இந்நிலையில் இந்த வருட விருது வழங்கலுக்கு முன்னதாக பிபிசியைச் சேர்ந்த உதைபந்தாட்ட ஆய்வாளர்கள் மெஸ்ஸி, றொனால்டோவுக்குப் பிறகு எதிர்காலத்தில் இந்த விருதை யார் பெற்றுக்கொள்வார்கள் என்றதொரு ஆய்வை மேற்கொண்டனர்.

அதில் மன்செஸ்ரர் சிற்றி வீரரான Kevin de Bruyne , செல்சி வீரரான ஈடன் ஹசாட் , ரொற்றின்காம் வீரரான ஹரி கேன், லிவர்பூல் வீரரான பிலிப் கோடின்கோ போன்ற வீரர்கள் நெய்மருக்கு கடுமையான போட்டியாளர்களாக இருப்பார்கள் எனக் கணித்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் நெய்மர் இந்த விருதை இலகுவாகப் பெறுவார் என்ற நம்பிக்கையை இந்த ஆய்வு கேள்விக்குட்படுத்தி உள்ளது.

ஆனாலும் அதையும் மீறி எதிர்காலத்தில் இந்தவிருது நெய்மருக்கு கிடைத்தால் 2007 ஆம் ஆண்டு இந்த விருதை பிரேசில் வீரர் காகா வென்ற பின்னர் இந்த விருதைப் பெறும் முதல் பிரேசில் வீரராக நெய்மர் இருப்பார் எனக் கருதப்படுகிறது.

அத்தோடு இந்த விருதை வெல்லும் ‘ R ’ இல் பெயர் தொடங்காத முதல் பிறேசில் வீரராகவும் நெய்மர் விளங்குவார். ஏனென்றால் கடந்த காலங்களில் இந்தவிருதை ‘ R ’ இல் பெயர் தொடங்கும் பிரேசில் வீரர்களான றொனால்டோ, றொனால்டின்கோ, றிவால்டோ, றிக்கி காகா ஆகியோரே பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்