ஊனமுற்ற சிரிய அகதிப்பெண்ணின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸி

Report Print Kabilan in கால்பந்து

அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியை சந்தித்ததின் மூலமாக, தனது கனவு நிறைவேறியுள்ளதாக சிரிய அகதியான இளம்பெண் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருவதால், நுஜீன் முஸ்தபா என்னும் 18 வயது இளம்பெண், தனது சகோதரியுடன் அலெப்போ நகரில் இருந்து ஜேர்மனிக்கு அகதியாக சென்றார்.

கொலோன் நகரில் வசிக்கும் நுஜீன், பெருமூளை பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர் ஆவார். அவர் அர்ஜெண்டினாவின் கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகை.

அவரை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என அவர் விரும்பினார். நுஜீனின் இந்த விருப்பத்தை அறிந்த பார்சிலோனா நிர்வாகம், மெஸ்சியின் ஆட்டத்தை நேரில் காண ஏற்பாடு செய்தது.

அதன்படி, கடந்த டிசம்பர் 2ஆம் திகதி செல்டா என்னும் அணிக்கு எதிராக பார்சிலோனா அணி மோதியது, அந்த ஆட்டத்தினை நுஜீன் நேரில் கண்டுகளித்தார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘நான் கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து மெஸ்ஸியின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். அவரது முகம் குழந்தை போல் உள்ளது.

அவர் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர், அதிலிருந்து மெஸ்ஸி இன்னும் மாறவே இல்லை, தற்போது 30 வயதாகிவிட்டாலும், இளம் வீரரைப் போல உள்ளார்.

அவரை நேரில் பார்த்ததன் மூலமாக என்னுடைய கனவு நனவாகிவிட்டது என தெரிவித்துள்ளார். மேலும், இங்கிலாந்து ராணியை சந்திக்க விரும்புவதாகவும் நுஜீன் தெரிவித்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்