நாவூரும் சுவையான வெள்ளைப்பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

பூண்டு அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்றாகும்.

இது ஏராளமான மருத்துவகுணங்களை கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது.

அதுமட்டுமின்றி ஜீரணமின்மை, ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, இரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, இரத்த அழுத்தம் சம்பந்மான நோய்கள், மூலநோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் பூண்டு அவசியமாகும்.

தற்போது வெள்ளைபூண்டை வைத்து ஆரோக்கியமான சுவையான பூண்டு ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • வெள்ளைப் பூண்டு உரித்தது - 4 கோப்பை
  • பொடி உப்பு - மு‌‌க்கா‌ல் கோப்பை
  • மிளகாய்த் தூள் - ஒரு கோப்பை
  • வெந்தயம் - ஒரு மேஜைக் கரண்டி
  • சீரகம் - ஒரு மேஜைக் கரண்டி
  • தனியா - ஒ‌‌ன்றரை தேக்கரண்டி
  • பெருங்காயப் பொடி- சிறிதளவு
  • கடுகு - ஒரு தேக் கரண்டி
  • நல்லெண்ணெய் - ஒரு கோப்பைஎலுமிச்சைச் சாறு - ஒரு கோப்பை
  • துறுவிய வெல்லம் - ருசிக்கேற்ப
செய்முறை

வெந்தயம், சீரகம், தனியா மூன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுத்து ஒன்றாக பொடி செய்து கொள்ளவும்.

எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து வடிகட்டி அளந்து கொள்ளவும்.

உரித்த பூண்டை குக்கரில் ஆவியில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். (வெயிட் போடாமல் )

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு சேர்த்து பொரிந்ததும் பெருங்காயப் பொடி, பூண்டு சேர்த்து உடனே அடுப்பை அணைத்து விடவும்.

அதிலேயே உப்பு, மிளகாய்த் தூள், வறுத்த பொடி வகைகள் சேர்த்து கலக்கவும்.

எலுமிச்சைச் சாறு கலந்து, விருப்பப்பட்டால் துறுவிய வெல்லம் சேர்த்து கரைந்ததும் உலர்ந்த பாட்டிலில் போட்டு வைக்கவும்.

ஓரிரு தினங்கள் கழித்து சாப்பிடலாம். 2 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்