சிங்கப்பூரில் 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: பிரதமர் பங்கேற்பு

Report Print Kabilan in நிகழ்வுகள்

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் சீரமைப்புப் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் அந்நாட்டின் பிரதமர் லீ சீ லூங் பங்கேற்றார்.

சிங்கப்பூரின் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் 164 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில், கடந்த 1978ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசால் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 1979, 1992, 2005 ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இக்கோயிலை சீரமைக்கும் பணி கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கியது.

இதற்காக ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்து அறநிலைய வாரியம் சார்பில் நடைப்பெற்ற இப்பணியில் உள்ளூர் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இக்கோயிலியின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, குடங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீர், 9 கோபுர கலசங்கள் மற்றும் கருவறையில் உள்ள பெருமாள் சிலை மீது தெளிக்கப்பட்டது.

இவ்விழாவில், சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்றார். மேலும், சுமார் 40 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

ஆலய நிர்வாகக் குழு தலைவர் வெள்ளையப்பன் கூறுகையில், ‘கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து, அடுத்த 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும். இந்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers