சாட்டையால் பெண்களை அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா!

Report Print Athavan in நிகழ்வுகள்

கிருஷ்ணகிரி அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவின் மாவிளக்கு ஊர்வலத்தில் இன்று பேய் விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பெண்கள் மண்டியிட்டு வரிசையாக அமர்ந்திருக்க அவர்களின் கைகளின் மேல் முத்துமாரியம்மன் கோவில் பூசாரி சாட்டையால் ஓங்கி அடித்து பேய்களை விரட்டினார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னமேலுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில். இந்த வருடத்திற்கான பங்குனித்திருவிழா இங்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த திருவிழாவில் பங்கேற்க சின்ன மேலுப்பள்ளி, மேல்பட்டி , காமாராஜர் புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்ளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். பின்னர் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார், இதணைத் தொடர்ந்து பெண்கள் தாலிபாக்கியம் வேண்டி மாவிளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பின்னர் அம்மன் ஊஞ்சல் உற்சவத்துடன் 200-க்கு மேற்பட் ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அவ்வாறு பலியிடப்பட்ட ஆடு, கோழிகளை சமைத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்தளித்தனர்.

இதையொட்டி இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடியிருக்கும் அந்த மைதானத்தில், தலைவிரிகோலமாக நீண்ட வரிசையில் மண்டியிட்ட பெண்கள் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி அமர்ந்தனர்.

அடுத்த நொடி ஒரு பெரியவர், மிக நீளமான சாட்டையை வேகமாக சுழற்றியபடி அந்தப் பெண்கள் மீது வீசினார். ஒரு சில பெண்கள் அந்தச் சாட்டையடியை 3 முறைக்கும் மேல் தாங்கினர். சிலர் ஒரே அடியில் வலிதாங்க முடியாமல், அலறியடித்தபடி ஓடினர்.

இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிபட்டனர். இந்த வினோத நிகழ்ச்சிகளுக்கு மனித உரிமை அமைப்பினர் பலர் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்