சேலத்தில் இடம்பெற்ற மாரியம்மனின் கோலாகல திருவிழா

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்

சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் மாசிமாத திருவிழா கோலாகலமாக நடைபெறுகின்றது.

அந்தவகையில் சேலத்தில் உள்ள பனமரத்துபட்டி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்றைய தினம் தேரோட்டம் இடம்பெற்றுள்ளது.

அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் தேரில் பவனிவந்து பக்தர்களிற்கு அருள் பாலித்துள்ளார்.

இதன்போது தேருக்கு முன் காட்டேறி வேடமணிந்த ஒருவர் ஆவேசமாக ஆடி, தன் கையிலிருந்த முறத்தால் ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் தலையில் அடித்து ஆசி வழங்கியுள்ளார்.

காட்டேறியிடம் அடி வாங்கினால் பில்லி சூனியம், கெட்ட காற்று, கருப்பு, பேய், பிசாசு விலகி திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என அங்குள்ள மக்கள் நம்புவதால், ஏராளமானோர் காத்திருந்து காட்டேறியிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.

அதோடு இடைப்பாடி , கவுண்டம் பட்டி சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சரபங்கா ஆற்றில் அலகு குத்திக்கொண்டு, கவுண்டம் பட்டி முழுவதும் சுவாமி ஊர்வலம் நடந்துள்ளது.

இதன்போது ஏராளமான பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஊர்வலம் சென்றுள்ளனர். அதன் போது தட்டில் இருந்த தேங்காய்களை எடுத்து பூசாரி பக்தர்களின் தலையில் உடைத்துள்ளார்.

மேலும் தாவாந்தெரு காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீமிதி விழாவும் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியுள்ளனர்.

அதோடு வெள்ளாவண்டிவலசில் நடந்த காளியம்மன் கோவில் திருவிழாவிலும் ஏராளமானோர் கலந்துகொண்டு தீமிதிது தங்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியுள்ளனர்.

அத்துடன் கொங்கனூர் மாரியம்மன் திருவிழாவையொட்டி கல்வடங்கம் காவிரி ஆற்றில் நீராடிய பக்கதர்கள், அம்மனுக்கு அலங்காரம் செய்து வீதிஉலா சென்றுள்ளனர். மேலும் அலகு குத்தி , அக்கினி சட்டி ஏந்தி நேர்த்திகடனை நிறைவேற்றியதுடன் பொங்கல் வைத்து கிடா வெட்டி அம்மனை வழிபாட்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers