வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருச்சிலுவை ஆலய திருவிழா

Report Print Dias Dias in நிகழ்வுகள்

மன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் நகரின் வடக்குப் பக்கமாக கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள விசுவாச சிறப்புமிக்க குருசுக் கோயில் என அழைக்கப்படும் திருச்சிலுவை ஆலய திருவிழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றி, மக்களின் சிறப்பு கருத்துக்களுக்காச் செபித்துள்ளார்.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கு மக்களும், பள்ளிமுனை தூய லூசியா ஆலயப் பங்கு மக்களும் இணைந்து இத்திருவிழாத் திருப்பலிக்கான ஆன்மீகப் பணிகளை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த இரண்டு ஆலயங்களுக்கும் பொறுப்பான அருட்பணியாளர்களும் இணைந்து அனைத்துப் பணிகளையும் செய்தனர். பல இறைமக்கள் திருவிழாத் திருப்பலியில் பங்கேற்று இறைவனுக்கு நன்றி செலுத்தியதோடு அருள் நலன்களையும் பெற்றுச் சென்றுள்ளனர்.

இந்தத் திருத்தலம் ஆன்மீக வளம் கொழிப்பதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பதாக இந்தியாவிலிருந்து இலங்கையிலுள்ள கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்ற அருட்பணி பிரான்சிஸ் சவேரியார் அடிகளார் மன்னாருக்கு கடல் வழியாக வந்து தற்போது குருசுக் கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தரையிறங்கியுள்ளார்.

அவ்வேளையில் அவர் வைத்திருந்த திருச்சிலுவை கடலில் விழுந்து காணமற் போய்விட்டது. பின்னர் கடல் நண்டு ஒன்று அந்தத் திருச் சிலுவையைக் கொண்டு வந்து அருட்பணி பிரான்சிஸ் சவேரியாரிடம் கொடுத்ததாக வரலாற்றுப் பதிவுகள் குறியிட்டுக் காட்டுகின்றன.

அடுத்து இலங்கையின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் தூய யோசவ் வாஸ் அடிகளாரும் இவ்வழியாகவே கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மீகப் பணி செய்ய பூநகரி நோக்கிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

திருவிழாவிற்கான வரலாற்றுப் பின்னணி

கிபி 325ஆம் ஆண்டு கொன்ஸ்டன்டின் மன்னனின் தாயார் தூய ஹெலனா என்பவர் எருசலேம் நகருக்குப் புனித பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் கல்வாரி மலைக்குச் சென்று, அகழ்வாராட்சியில் ஈடுபட்டபோது, அங்கே மூன்று சிலுவைகள் இருப்பதைக் கண்டுள்ளார். இந்த மூன்று சிலுவைகளில் எது இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவை என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அவர் ஒரு கை சூம்பிய மனிதனை அழைத்து, அந்த மூன்று சிலுவைகளையும் தொடுமாறு சொல்லியுள்ளார். உடனே அம்மனிதன் மூன்று சிலுவைகளையும் தொட்டபோது, அதிலிருந்த ஒரு சிலுவையிலிருந்து ஆற்றல் வெளிப்பட அம்மனிதருடைய கை குணமடைந்துள்ளது.

இதைப் பார்த்த தூய ஹெலனா அந்த திருச்சிலுவையை உரோமை நகருக்குத் தூக்கிகொண்டு வந்து, ஆலயம் ஒன்றைக் கட்டி எழுப்பி, அதில் திருச்சிலுவை வைத்துள்ளார்.

அவர் திருச்சிலுவையை உரோமில் உள்ள ஆலயத்தில் நிறுவிய நாள் 326ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ஆம் நாள். அன்றிலிருந்து திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers