ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 25 வயது இளைஞர், தனது தந்தை தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை கடின உழைப்பால் ஈடுகட்டி கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.
முகமது ஸஹித்(25) என்ற இளைஞரின் குடும்பம், கடந்த 2006ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து ஐக்கிய அமீரகத்திற்கு இடம்பெயர்ந்தது.
இவரது தந்தை ஹசிம், கட்டிடம் மற்றும் எண்ணெய் சார்ந்த தொழில்களில் வெற்றிகரமாக வலம் வந்தார். ஸஹித் பள்ளிப்படிப்பை முடித்தபோது Audi கார் ஒன்றை பரிசாக அளித்தார் ஹசிம்.
இந்நிலையில் தான் தொழில் கூட்டாளி ஒருவரால் ஹசிம் ஏமாற்றப்பட்டார். அதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, ஸஹித்தின் குடும்பம் அயர்லாந்திற்கு சென்றது.
எனினும், ஐக்கிய அமீரகம் தான் ஸஹித்திற்கு பிடித்தமான இடமாக இருந்ததால், அங்கு செல்ல வேண்டும் என்றும், தனது குடும்பம் இழந்த சொகுசு வாழ்க்கையை மீண்டும் அடைய வேண்டும் என்றும் ஸஹித் முடிவெடுத்தார்.

அதற்காக அயர்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் சர்வதேச தொழில் சார்ந்த பட்டப்படிப்பை அவர் பயின்றார். அதனைத் தொடர்ந்து அவர் தன் குடும்பத்துடன் 2017ஆம் ஆண்டு ஐக்கிய அமீரகத்திற்கு திரும்பினார்.
தனது தந்தை கட்டுமான தொழிலை செய்யக் கூடாது என்று முடிவெடுத்த ஸஹித், ஒன்லைன் முறையில் ஒரு தொழிலை தொடங்க திட்டமிட்டார். அதன்படி துபாயில் கார்களை வாடகைக்கு விடும் தொழிலை ஆரம்பிக்க திட்டமிட்டார்.
துபாய் நகருக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால், வாடிக்கையாளர்கள் ஒன்லைன் மூலம் பதிவு செய்ய MyRide.ae என்ற இணையதள பக்கத்தை ஆரம்பித்தார். குறைந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு சொகுசு காரை வாடகைக்கு கொடுத்து வந்த ஸஹித், அவர்களிடம் இருந்து குறைந்த அளவிலான தொகையை முன்பணமாக பெற்றார்.
தொழிலில் நல்ல லாபம் வரத் தொடங்கியதால் Tripzy.ae என்ற பயண சேவை தொடர்பான இணையதள சேவையை ஆரம்பித்தார். இதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் சுற்றுலாவிற்கான விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹொட்டல் அறைகள் ஆகியவற்றை பதிவு செய்ய முடியும்.

இந்தத் தொழிலிலும் வெற்றி அடைந்த பிறகு, மற்றொரு தொழிலை தொடங்கிய ஸஹித் அதிலும் சாதித்து வருகிறார். இவ்வாறாக மூன்று நிறுவனங்களுக்கு தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்த ஸஹித், தனது 25வது வயதில் கோடீஸ்வரராக திகழ்கிறார்.
தற்போது இவரது தொழில்களின் மொத்த லாப மதிப்பு 12 மில்லியன் திர்ஹாமாக இருக்கிறது. இது நிறுவனத்தின் லாப தொகை மட்டுமே ஆகும்.
தனது தந்தையின் நஷ்டத்தை போக்கி, குடும்பத்தை சரிவில் இருந்து மீட்டு, இளம் வயதிலேயே கோடீஸ்வரராகி சாதனை படைத்துள்ளார் ஸஹித்.