அன்று அரசுப்பள்ளி... இன்று அதே பள்ளிக்கு கோடிக்கணக்கில் கொடுத்து உதவிய தமிழர்! நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in தொழிலதிபர்

தமிழகத்தில் தான் படித்த பள்ளியை நவீனமயமாக்க்க கோடீஸ்வரர் ஒருவர் 15 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தும், அதை மாநகராட்சி நிர்வாகம் வாங்காமல் திண்டாட விட்ட சம்பவம் பலரையும் நோகடிக்கும் படி செய்துள்ளது.

உலகில் சாப்ட்வேர் நிறுவனத்தின் முன்னணியாக திகழ்ந்து வரும் HCL நிறுவனத்தின் அதிபராக ஷிவ் நாடார் உள்ளார்.

சாதாரண மாநகராட்சி பள்ளியில் படித்த இவர், தற்போது பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாக உயர்ந்து நிற்கிறார்.

மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகேயுள்ள இளங்கோ அரசுப்பள்ளியில் தான் இவர் 7 மற்றும் 8-ஆம் வகுப்பு படித்தார்.

கடந்த 1937-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இப்பள்ளி சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், அக்கம் பக்கத்தில் இருக்கும் பிள்ளைகள் மட்டுமே இங்கு வந்து படித்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு தான் படித்த பள்ளிக்கு ஷிவ் நாடார் வந்த போது, பள்ளியின் நிலையைக் கண்ட வேதனையில் கண்கலங்கியுள்ளார்.

இதனால் தான் படித்த பள்ளியை நம்பர் 1 இடத்திற்கு கொண்டுவர முடிவு எடுத்தார். இதற்காக பள்ளிக்கு 15 கோடி நன்கொடை கொடுக்க முன்வந்துள்ளார்.

ஆனால் மாநகராட்சி நிர்வாகமோ முதலில் இதை ஏற்கவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்து மாநகராட்சிக்கு அலைந்து எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.

மாநகராட்சி நிர்வாகம் ஏற்காததற்கு முக்கிய காரணம், வழக்கமாக மாநகராட்சிக்கு எந்த நிதி வந்தாலும் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலருக்கும் கமிஷன் போய் சேர்ந்து விடும்.

இது நன்கொடை என்பதால் பலருக்கும் கமிஷன் கிடைக்காது. தற்போது உள்ளாட்சி அமைப்பு இல்லாததால் அதிகாரிகள் 15 கோடி ரூபாயை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷிவ் நாடார் இதை கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அதன் பின்னரே நிதியை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. ஒருவழியாக இளங்கோ பள்ளிக்கென்று புதிதாக இரு கட்டடங்கள் கட்டும் பணிகள் 2017-ஆம் ஆண்டு தொடங்கியது.

அழகிய கட்டடங்கள் 24 வகுப்பறைகளுடன் எழுந்தது. மதுரைக்கு வரும்போதெல்லாம் பள்ளியில் நடைபெறும் பணிகளை ஷிவ் நாடார் பார்த்துவிட்டுச் சென்று திரும்பினார்.

பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கரும்பலகை மட்டுமே 15 அடி நீளம், பள்ளிக்குள்ளேயே தண்ணீருக்காக தனி பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின்சாரத்தில் வகுப்பறைகள் இயங்கும்.

கழிவறைகள் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 100 கணினிகளுடன் லேப், முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட லைப்ரரி, பள்ளி வளாகத்தில் அழகிய பூங்கா ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

கூடைப்பந்து விளையாட்டில் இப்பள்ளி சாம்பியன் என்பதால் நவீன கூடைப்பந்து மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியை கவனிக்கும் பொறுப்பு ஹெச்.சி.எல். மேலாளராக நீருபவி திபேந்திர சிங் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்