முதலில் நஷ்டம்.. ஆனால் இன்றோ ரூ.1500 கோடிகளுக்கு அதிபதி

Report Print Harishan in தொழிலதிபர்

முதல் தொழிலில் தோல்வியடைந்த நபர் ஒருவர் தற்போது 1500 கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 1953-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் திகதி பிறந்தவர் தாரா ரஞ்சன் பட்நாயக்.

சிவில் வழக்கறிஞர் பத்மநாப பட்நாயக்கின் 8 பிள்ளைகளில் ஒரு மகனாக பிறந்த இவரது இளைமைக் காலம் முழுவதும் நடுத்தர வாழ்க்கையாகவே சென்றுள்ளது.

இளங்கலைப் பட்டம் பெற்ற பட்நாயக், குடும்பத்தினர் அனைவரும் போலவே வக்கீல் படிப்பிற்கு சேர்ந்துள்ளார்.

அங்கு தான் அவர் வாழ்க்கை பாதை மாறியதாக அவரே கூறுகிறார். ஆம், அங்கு அவருக்கு கிடைத்த நண்பர் ஜெ.ரஹ்மத்துடன் இணைந்து 1975-ஆம் ஆண்டு மீன் பிடி படகுகள் வாங்குவதில் முதலீடு செய்துள்ளார்.

அந்த தொழிலில் சிறிதளவும் அனுபவம் இல்லாத காரணத்தால் படுதோல்வியில் முடிந்துள்ளது. பல லட்ச ரூபாய் கடனாளியாக மாறிய ரஞ்சன் தன்னம்பிக்கையை இழக்காமல் கிடைத்த தொடர்புகளை வைத்து ஒடிசாவின் பெரிய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இறால் மீன்களை விற்பனை செய்துள்ளார்.

மீனவர்களிடம் நேரடியாக கொள்முதல் செய்த மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் பல லட்ச ரூபாய் லாபம் பார்த்த ரஞ்சன், 1985-ம் ஆண்டு புவனேஸ்வர் நகரில் ஃபால்கான் மரீன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

1987-88 காலக்கட்டங்களில் 4.66 கோடியாக இருந்த ஆண்டு வருவாயை உயர்த்தும் திட்டத்தில் பேக்கேஜ் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளார்.

பின்னர் வங்கியில் கடனாக பெற்றத் தொகையை வைத்து இரண்டு பதப்படுத்தும் பிரிவுகளை தொடங்கிய ரஞ்சன், 1990-91-இல் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை 12.5 கோடியாக உயர்த்திக் காட்டினார்.

ஆனால் 1999-இல் ஒடிசாவை தாக்கிய புயலால் கடுமையாக பதிக்கப்பட்ட நிறுவனம் இரண்டு கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

அதன்பின் கடுமையான வியூகங்களை வகுத்த தாரா ரஞ்சன் தலைமையிலான அணியினர் சிறு குறு விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து அவர்கள் உற்பத்தி செய்த இறால்களை நேரடியாக கொள்முதல் செய்துள்ளார்.

இப்போது வரை 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகளை பணியில் வைத்துள்ள ரஞ்சனின் நிறுவனம் 2001-இல் ஆண்டு வருவாய் ரூ.157 கோடியை தாண்டியது.

தற்போது 64 வயதாகும் இந்தத் தொழிலதிபரின் நிறுவனம் ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமாக விஸ்வரூபமெடுத்துள்ளது.

இதற்கான தாரக மந்திரம் என்னவா இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்:

என் மேஜிக் மந்திரம்- நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடின உழைப்பு. இந்த எளிய முறைதான் வெற்றி எனும் சிகரத்தை எனக்குப் பெற்றுத்தந்தது என்கிறார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்