ஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதி கட்டிய இந்து கோடீஸ்வரர்

Report Print Fathima Fathima in தொழிலதிபர்
113Shares

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐந்து மிகப்பெரிய கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவரான மருத்துவர் பி.ஆர். ஷெட்டியை பிபிசி நிருபர் ஜுபைர் அஹ்மத் சந்தித்து உரையாடினார்.

நான் ஜன சங்கத்தை சேர்ந்தவன். என்னுடைய ஜனாசங்க பின்னணியைப் பற்றி நீங்கள் கேட்கவேயில்லை என்று சொல்கிறார் அபுதாபியில் வசிக்கும் இந்திய மருத்துவர் டாக்டர் பி.ஆர். ஷெட்டி. ஜனசங்கத்துடனான அவரது தொடர்பைப் பற்றி நான் கேட்பதற்கு முன்பே அவர் இந்த வார்த்தைகளை என்னிடம் சொல்லிவிட்டார்.

பில்லியன்கணக்கான டாலர்களுக்கு அதிபதியான அவர், முஸ்லிம்களுக்காக மசூதி ஒன்றை கட்டிய முதல் ஜனசங்க உறுப்பினராக இருப்பார் என்று உறுதியாக சொல்லலாம். அபுதாபியில் உள்ள அவரது மருத்துவமனையில் கட்டப்பட்ட இந்த மசூதி அளவில் சிறிதாக இருந்தாலும் அழகில் மனதை கொள்ளைக் கொள்வதாக உள்ளது.

அபுதாபியில் இருக்கும் முதல் இந்து கோயிலை கட்டும் குழுவின் தலைவராக டாக்டர் ஷெட்டி இருக்கிறார். 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டபோது, கோயில் கட்ட நிலம் கொடுப்பதாக அபுதாபி அரசு அறிவித்தது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த கோயிலின் கட்டுமானப்பணிகள் தொடங்கவிருக்கின்றன.

கோயிலின் கட்டுமானப் பொறுப்புகளை மேற்கொள்ளும் குழுவின் தலைவராக டாக்டர் ஷெட்டிக்கு அதிக பொறுப்புகள் இருக்கின்றன. துபாயில் ஏற்கனவே இரண்டு கோயில்களும் ஒரு குருத்வாராவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்தபோது ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பிரதமரின் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தவர் டாக்டர் ஷெட்டி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஐந்து பெரிய பணக்கார இந்தியர்களில் ஒருவரான டாக்டர் ஷெட்டி, அங்குள்ள நியூ மெடிக்கல் சென்டர் (NMC) என்ற மிகப்பெரிய சுகாதார சேவை நிறுவனத்தின் உரிமையாளர்.

டஜன் கணக்கான மருத்துவமனைகளும் கிளினிக்குகளுக்கும் சொந்தக்காரரான டாக்டர் ஷெட்டி, யூ.ஏ.ஈ எக்சேஞ்ச் என்ற பெயரில் இயங்கும் பண பரிமாற்ற நிறுவனத்தின் உரிமையாளர்.

இதைத்தவிர, 2014ஆம் ஆண்டில் "ட்ரைவெக்ஸ்" என்ற வெளிநாட்டு நாணய நிறுவனத்தை வாங்கினார், இந்த நிறுவனத்திற்கு 27 நாடுகளில் கிளைகள் உள்ளன.

வீடு-வீடாக சென்று மருந்து விற்றேன்

டாக்டர் ஷெட்டியின் கதை, சாமானியர் ஒருவர் அரசனான சுவராஸ்சியமான கதைக்கு நிகரானது. 1942ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிறந்த அவர், 1973இல் கடன் பெற்ற பணத்துடன், வேலை தேடி துபாய்க்கு சென்றார்.

கடந்த காலத்தை நினைவுகூரும் டாக்டர் ஷெட்டி, "கடன் வாங்கிய சிறிய தொகையுடன் ஓப்பன் விசாவுடன் வேலை ஏதும் இல்லாமல் துபாய் சென்றேன். எதாவது ஒரு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்ற நிர்பந்தத்தில் சென்றேன்."

வேலை இல்லாமல் துபாய்க்கு சென்ற அவர் கிடைத்த வேலையை செய்யும் மன உறுதியை கொண்ட உழைப்பாளியாக திகழ்ந்தார். இந்தியாவில் மருந்தாளர் (ஃபார்மாஸிஸ்ட்) பட்டம் பெற்றிருந்தது அங்கு அவருக்கு கைக்கொடுத்தது.

"முதலில் மருந்து விற்பனையாளராக வேலை கிடைத்தது. வீடு-வீடாக சென்று மருந்து விற்கத் தொடங்கினேன். மருத்துவர்களிடம் சென்று மருந்துகளின் மாதிரிகளை கொடுத்து விற்பனைக்கான ஆர்டர் வாங்குவேன். இப்படித்தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் மருத்துவ விற்பனை பிரதிநிதியாக நான் வேலையைத் தொடங்கினேன்."

காலப்போக்கில் தனது அடித்தளத்தை அங்கு அழுத்தமாக பதிக்கத் தொடங்கிய ஷெட்டி, வெற்றிப் படிக்கட்டுகளில் விரைவாக சென்றார். அந்த படிக்கட்டுகளோ மின் ஏணியைப்போல அவரை துரிதமாக மேலே கொண்டு சென்றது.

1980இல் யு.ஏ.ஈ எக்ஸ்சேஞ்ச் என்ற நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனம் ஆண்டு தோறும் இந்தியா, பிலிப்பைன்ஸ், இலங்கை உட்பட மொத்தம் 24 நாடுகளுக்கு 8 பில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை அனுப்புகிறது.

ஆனால் இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படும் இன்றைய நாட்களில் பணம் அனுப்பும் நிறுவனத்திற்கான தேவை எப்படி இருக்கிறது?

நவீன தொழில்நுட்பங்கள் தனது நிறுவனத்திற்கு நேர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தியிருப்பதாக டாக்டர் ஷெட்டி கூறுகிறார். "புதிய கிளைகள் திறக்கவும், ஊழியர்களுக்காக பணம் செலவழிக்க வேண்டியதில்லை என்ற நிலையை மொபைல் பயன்பாடு உருவாக்கிவிட்டது. உங்கள் பணத்தை ஒரு செயலி மூலம் உங்கள் நாட்டில் உங்கள் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக அனுப்பமுடியும் என்பது எங்கள் தொழிலை விரிவுபடுத்த சிறப்பான வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது."

ஷெட்டியின் நிறுவனத்தை துவங்கிவைத்த ஏ.பி.ஜே அப்துல் கலாம்

2003ஆம் ஆண்டில் ஷெட்டி மருந்துகளை தயாரிக்கும் என்.எம்.சி நியூஃபார்மா என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அன்றைய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நிறுவனத்தை திறந்துவைத்தார்.

2014ஆம் ஆண்டில் "ட்ரைவெக்ஸ்" என்ற வெளிநாட்டு நாணய நிறுவனத்தை வாங்கினார். ஒரு மதிப்பீட்டின்படி சுமார் நான்கு பில்லியன் டாலர் முதலீடுகள் செய்துள்ள தொழிலதிபர் டாக்டர் ஷெட்டி.

வாழ்வதற்கு மிகச்சிறந்த நாடு

வேலையில்லாமல் இருந்த சாதாரண இந்திய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மிகப்பெரிய செல்வந்தரானதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன?

"தரம் மற்றும் திறமையே பிரதானமானது என்று எனக்கு ஆலோசனை வழங்கிய ஷேக் ஜாயேத் (ஜாயேத் பின் சுல்தான் அல் நாஹ்யான் எமிரேட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் உரிமையாளர்) அவர்களின் ஆலோசனைகளை நான் பின்பறுவதுதான் எனது வெற்றியின் மிகப்பெரிய ரகசியம்.

தான் வாழும் நாட்டைப்பற்றி பெருமையாக பேசுவதில் மகிழ்ச்சி கொள்கிறார் டாக்டர் ஷெட்டி. "இது மிகச் சிறந்த நாடு என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் சொல்ல விரும்புகிறேன், அல்லா என்னை சரியான நேரத்தில் இங்கு கொண்டு வந்து சேர்த்தார்."

இந்த நாடு அவருக்கு தேவையான அனைத்தையும் கொடுத்ததே அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் மேல் வைத்திருக்கும் காதலுக்கு காரணம். இந்தியாவிலேயே இருந்திருந்தால் எனக்கு இந்த அளவு வெற்றி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என்கிறார் டாக்டர் ஷெட்டி.

"எனக்கு இரண்டு தாய்மார்கள்"

அப்படியென்றால், தாய்நாடான இந்தியா மீது டாக்டர் ஷெட்டிக்கு அபிமானம் இல்லையா? இந்தக் கேள்விக்கு மறுப்பு தெரிவித்து சட்டென்று பதில் சொல்லும் அவர், "எனக்கு இரண்டு தாய் என்றுதான் எப்போதுமே சொல்வேன். என்னுடைய முதல் தாய் இந்தியா, என்னை ஈன்றெடுத்து ஆளாக்கிய என் தாயகம். இரண்டாம் தாயான ஐக்கிய அரபு அமீரகம் என்னை வளர்த்து என் திறமைகளை வெளிக்கொணர்ந்த நாடு. இந்தியாவில் பிறந்தவன் இன்று வெளியுலகத்திற்கு பெருமையாக அறிமுகப்படுத்துவதற்கு காரணம் இந்த நாடுதான்".

ஷெட்டிக்கு மூன்று குழந்தைகள். தகப்பனின் செல்வ செழிப்பில் இல்லாமல், தன் பிள்ளைகள் சொந்தக் காலில் வேரூன்றியிருப்பதாக சொல்கிறார் டாக்டர் ஷெட்டி.

இந்த பெரிய வணிக சாம்ராஜ்யத்தின் மகுடத்தை தன் வாரிசுகளுக்குதானே கொடுப்பார் என்ற கேள்விக்கு அவரிடம் இருந்து பதில் இல்லை. அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, தனது காலத்திற்கு பிறகு அதன்மூலம் தொழிலை தொடர விரும்புவதாக கூறுகிறார் டாக்டர் ஷெட்டி.

- BBC - Tamil

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்