அமீரகத்தில் கார் கழுவியவர்... இன்று பிரபல தொழிலதிபர்!

Report Print Gokulan Gokulan in தொழிலதிபர்

அமீரகத்தில் கார் கழுவும் பணிக்காக இந்தியாவிலிருந்து சென்ற ஷாஜகான் என்பவர் அங்கு மிகப்பெரிய தொழிலதிபராக மாறியுள்ளது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

சுமார் 27 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்து அபுதாபியில் தந்தை செய்துவந்த கார் கழுவும் பணியை தானும் செய்வதற்காக அமீரகத்துக்கு சென்றவர் ஷாஜகான்.

தகவல் தொடர்புத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ள இவர், என்றேனும் ஒருநாள் அந்த படிப்பு கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து உழைத்து வந்துள்ளார்.

அமீரகத்துக்கு சென்று சிறிது காலம் உழைத்துவிட்டு தாய் நாட்டிற்கு திரும்பிவிடும் சராசரி இந்தியராக இருந்து விடாமல், அமீரகத்திலேயே தொழில் தொடங்க வேண்டும் என்பது தான் இவரது இலக்காக இருந்தது.

ஆரம்பத்தில் சிறிது காலம் கார் கழுவும் நிறுவனத்தில் ஊழியராக கடுமையாக பணிபுரிந்த ஷாஜகான் பின்னர் சேமிப்பு பணத்தில் சிறியதாக ஒயாஸிஸ் என்னும் கார் கழுவும் நிறுவனத்தை தொடங்கினார்.

கார் ப்ரியர்களான அரபிகளின் மத்தியில் இவரது தொழில், நேர்மை மற்றும் நேர்த்தியால் பிரபலம் அடைந்தது. கடுமையாக உழைத்த ஷாஜகான் பெருமளவு லாபத்தை ஈட்டினார்.

ஒயாஸிஸ் நிறுவனத்தின் தலைவராக உழைத்த ஷாஜகான் பின்னர் ரியல் எஸ்டேட் மற்றும் ஹெல்த் கேர் போன்ற துறைகளில் பெருமளவு முதலீடு செய்து லாபத்தையும் ஈட்டினார்.

அரபு நாட்டில் இந்தியர் தொழில் தொடங்கி வெற்றி பெறுவதென்பது சாதாரண விஷயமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே. அந்த விதத்தில் மிகவும் பெருமைக்குறியவர் ஆகின்றார் ஷாஜகான்.

இந்த சாதனையை பாராட்டி புகழ்பெற்ற வளைகுடா பத்திரிக்கையான ’கலீஜ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் ஷாஜகான் அளித்துள்ள பேட்டியில் தொழில் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டங்களில் கடுமையான சவால்களை சந்திக்க நேரிட்டது. அந்தச் சமயங்களில் ‘தாய்நாட்டிற்கு திரும்பிவிடலாமா? என்ற எண்ணம் கூட தோன்றியுள்ளது.

இந்த நிறுவனத்தை பெரிய நிறுவனமாக வளர்த்தெடுக்க பல சமரசங்களை செய்ய நேரிட்டது.

அமீரகத்தில் தொழில் செய்து வெற்றி பெறுவது கடினமென பலர் கூறுகின்றனர், ஆனால் நான் சந்தித்த பிரச்சனைகளுக்கு சமமாக நல்ல மனிதர்களையும் சந்தித்துள்ளேன். அவர்களிடம் பெற்ற உதவியை மறக்க முடியாது என கூறியுள்ளார்.

ஷாஜகானுக்கு பாத்திமா என்கிற மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர். தன் நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியைக்கொண்டு இந்தியாவில் வசிக்கும் ஏழைமக்களுக்கு ஷாஜகான் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers