உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்ற ஒரே தமிழர்

Report Print Meenakshi in தொழிலதிபர்

2017-ம் ஆண்டிற்கான உலக அளவில் உள்ள கோடீஸ்வரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையானது வெளியிட்டுள்ளது. இதில் முதல் 250 இடத்தில் இந்தியாவை சேர்ந்த 10 கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு தமிழர் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் சிவநாடார். இவரின் சொத்து மதிப்பு 12.3 பில்லியன் டொலர்.

திருச்செந்தூரில் இருந்து 10கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மூலைப்பொழி என்னும் ஊரில் 1945-ல் பிறந்தார். அப்பா சுப்பிரமணிய நாடார் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி. அம்மா வாமசுந்தரி தேவி தினந்தந்தி நாளிதழை தொடங்கிய சி.பா. ஆதித்தனாரின் உடன்பிறந்த சகோதரி.

பள்ளிப்படிப்பினை தமிழிலேயே பயின்ற சிவநாடார், உயர் படிப்பினை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முடித்தார்.

பின்னர், கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக் இன்ஜீனியரிங் முடித்து, ஆராய்ச்சி மேற்கொண்டு டாக்டர் பட்டமும் பெற்றார்.

1967-ல் புனேவில் உள்ள வால்சந்த நிறுவனத்தில் சேர்ந்து ஓராண்டு பணியாற்றினார். பின்னர், டி.சி.எம். டேட்டா புராடக்ட் நிறுவனத்தில் நிறுவன பயிற்சியாளராக சேர்ந்து டெல்லிக்கு போனார்.

டி.சி.எம் நிறுவனத்தில் தன் திறமையினை கொண்டு வேலை பார்த்ததால், சில ஆண்டுகளிலேயே இந்திய தலைமை மார்கெட்டிங் அதிகாரியாக மாறினார்.

8ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த அவர் பின்னர் சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என விரும்பி அந்நிறுவனத்தின் பணிபுரிந்த ஐவரை தன்னுடன் இணைத்துகொண்டு வெளியேறினார்.

1975-ல் தொழில் தொடங்கும் போது முதன்முதலாக அவர் தேர்ந்தெடுத்தது எலக்ட்ரானிக்ஸ் துறைதான். மைக்ரோகாம்ப் என்னும் பெயரில் நிறுவனத்தினை தொடங்கி டெலி டிஜிட்டல் கால்குலேட்டர்களை விற்பனை செய்யதொடங்கினார்.

இதில் நல்ல லாபம் வரவும் இருபது இலட்ச முதலீட்டில் 1976-ல் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் கம்ப்யூட்டர் விற்பனையை தொடங்கினார்.

அந்த நேரத்தில் 1977-ல் காங்கிரஸ் கட்சியினை தோற்கடித்து, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியினை பிடித்தது. ஜனதா கட்சி வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் முதலீட்டினை 40 சதவீதமாக குறைத்து கொள்ளவேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை ஏற்காத கோகோ கோலா, கம்ப்யூட்டரை தயாரிக்கும் ஐ.பி.எம். நிறுவனம் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தது. இந்த முடிவு ஹெச்.சி.எல். நிறுவனம் கம்ப்யூட்டரை தயாரித்து விற்பதற்கு சாதகமாக அமைந்தது.

சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் தேவை அதிகமாக இருப்பதை அறிந்த சிவநாடார் அங்கு ஒரு நிறுவனத்தினை தொடங்கி ஹார்வேர்டுகளை விற்பனை செய்தார்.

1983-ல் ராஜீவ்காந்தி பிரதமர் ஆன பின் வெளிநாட்டு உதிரி பாகங்கள் இறக்குமதியில் விதிமுறைகள் தளர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிசிபீ என்னும் பெர்சனல் கம்ப்யூட்டரை தயாரித்து விற்பனை செய்தார். 1987-ல் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் விற்பனை நூறு கோடியினை தொட்டது.

1991- நரசிம்மராவ் பிரதமரான பின் தாராளமயமாக்கல் கொள்கை மூலமாக வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாக தொழில் செய்யும் வாய்ப்பு கிட்டியது.

அமெரிக்காவின் ஹெச்.பி. நிறுவனத்துடன் சேர்ந்து தொழில்நுட்பங்களை உருவாக்கி பல ஆயிரம் கோடி வருமானத்தினை தொட்டது.

நாற்பது துணை நிறுவனங்களாக இருந்த அமைப்பினை ஒன்றிணைத்து ஐந்து முக்கிய நிறுவனங்களாக மாற்றினார்.

2004-ல் ஐந்து நிறுவனங்களை ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் மற்றும்.ஹெச்.சி.எல். இன்போசிஸ்டமாக மாற்றினார். தற்போதுள்ள முண்ணனி ஐ.டி. நிறுவனங்களில் ஹெச்.சி.எல் நிறுவனமும் ஒன்று.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments