சலூன் கடை டூ டிராவல்ஸ் நிறுவனம்: சாதாரண தொழிலாளி கோடீஸ்வரர் ஆன கதை

Report Print Arbin Arbin in தொழிலதிபர்

பெங்களூரில் சலூன் கடை நடத்திக்கொண்டிருக்கும் நபர் ஒருவர் பல அரிய மாடல் கார்கள் உட்பட150 சொகுசுக் கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ரமேஷ் பாபு பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு தனது தந்தையின் தொழிலான முடி திருத்தும் வேலையை முழுநேரமாகத் தொடங்கினார்.

அவரது வாழ்க்கையின் திருப்புமுனை 1994ஆம் ஆண்டுதான். அப்போது, ரமேஷ் ஒரு மாருதி ஓம்னி வேன் வாங்கினார். அதை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க திட்டமிட்டார்.

அதன் பின் மெல்ல மேலும் பல கார்களை வாங்கி, ரமேஷ் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தைத் ஆரம்பித்தார். இப்போது, அவரிடம் மொத்தம் 150 சொகுசுக் கார்கள் உள்ளன.

கார் வாடகைக்கு விடும் தொழிலில் இப்போது நல்ல லாபம் கிடைத்தாலும், பழசை மறக்கவில்லை என கூறும் ரமேஷ், சலூன் கடை வேலையை விடமாட்டேன் என்கிறார்.

தினமும் 5 மணி நேரம் தன் சலூனுக்குச் சென்று வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தும் பணியைச் செய்து வருகிறார்.

அவர் தினமும் வேலைக்குச் செல்லும் ரோல்ஸ் ராய்ஸ் காரை கடந்த 2011ஆம் ஆண்டு வாங்கினார். உலகமே அவரை கவனிக்கத் தொடங்கிய தருணம் அது.

இப்போது, அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் மட்டுமின்றி 11 மெர்சிடிஸ் கார்கள், 10 பி.எம்.டபிள்யூ. கார்கள், இரண்டு ஆடி கார்கள், இரண்டு ஜாகுவார் கார்கள் உள்ளன.

ஒரு மாதத்திற்கு முன் அவர் வாங்கிய புதிய கார், மெர்சிடிஸ் மேபக் எஸ்600 (Mercedes Maybach S600). இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.3.2 கோடி.

இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு இல்லை என்பதால் ஜேர்மனியில் இருந்து வரவழைத்திருக்கிறார்.

பெங்களூரில் இந்த காரை வாங்கிய மூன்றாவது நபர் ரமேஷ் பாபு. தொழிலதிபர் விஜய் மல்லைய்யாவும் மற்றொரு பொறியாளரும் மட்டுமே இதை வாங்கியிருக்கிறார்கள்.

முடி திருத்தும் தொழிலாளராக வாழ்க்கையைத் தொடங்கிய ரமேஷ், தற்போது பெங்களூரின் கோடீஸ்வர தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழ்வது குறிப்பிடத்தகுந்தது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments