பாடகர் எஸ்பிபியின் கல்லறையில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த அவர் மகன் சரண் சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த செப்டம்பர் 25-ம் திகதி உயிரிழந்தார்.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் அமைந்த அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட நபர்களே எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு ரசிகர்கள் வந்திருந்தனர்.
இதனிடையே பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பியின் கல்லறைக்கு செல்ல சிரமம் இருந்த நிலையில் அதனைப் போக்கும் விதமாக எந்த நேரத்திலும் அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தனி வழி ஏற்படுத்தி தந்துள்ளார்.
இதையடுத்து ரசிகர்களின் பாராட்டை சரண் பெற்றிருக்கிறார்.