வடிவேலு பாலாஜியின் சிகிச்சைக்கு 18 முதல் 20 லட்சம்! மரணத்திற்கு என்ன காரணம்? உண்மையை உடைத்த உறவினர்கள்

Report Print Santhan in பொழுதுபோக்கு

நடிகர் வடிவேலு பாலாஜி உயிரிழந்ததற்கு தனியார் மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தனியார் தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலமாக அறிமுகமாகி பல சின்னத்திரைகளில் அசத்தி வந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி, சென்னை சேத்துப்பட்டு எம்.எஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு 10 முதல் 12 தினங்கள் சிகிச்சை பெற்ற நிலையில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால், உறவினர்கள் அங்கிருக்கும் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேல் பாலாஜி இன்றுமதியம் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் அவரது பூத உடல் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பணப்பற்றாக்குறை காரணமாகவே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சந்தித்த அவரது உறவினர்கள் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையின் அலட்சியமான சிகிச்சையாலேயே அவர் உயிரிழந்தாகவும் பணம் இல்லாததால் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பொய்யான தகவல் பரவி வருகிறது என்றும் தெரிவித்தனர்.

மேலும் அவரது சிகிச்சைக்காக 18 முதல் 20 லட்சம் வரை செலவு செய்தும் காப்பாற்ற முடியவில்லை என வேதனை தெரிவித்த உறவினர்கள் பணத்தை பறிக்க தனியார் மருத்துவமனை முயற்சி மேற்கொண்டதாலேயே இறுதியில் அரசு மருத்துவமனையை நாடிச் சென்றோம் என கண்ணீர் மல்க கூறினர்.

நடிகர் வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கு நாளை மதியம் 2 மணிக்கு இந்து முறைப்படி நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்