இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் முரளிதரனாக நடிப்பதில் பெருமை என்றும், அவரது கதாபாத்திரம் சவாலானது என்றும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும். 2020ஆம் ஆண்டு இறுதியில் இந்த படத்தினை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் நடிப்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, சர்வதேச அளவில் முத்திரை பதித்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு சவாலாக இருக்கும்.
அதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். முரளியே இந்த படத்தில் இணைந்து பணியாற்றி, கிரிக்கெட் குறித்து என்னை வழி நடத்தவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு முரளிதரனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.