எதிலும் தைரியமாகவும், தெளிவோடும் முடிவெடுப்பேன்! பாரதிராஜா அதிரடி

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருப்பதாகவும், எந்த விடயத்திலும் தைரியமாகவும், தெளிவோடும் முடிவெடுப்பேன் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக பாரதிராஜா ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தன்னை போட்டியின்றி தலைவராக தெரிவு செய்த இயக்குநர் சங்க பொதுக்குழுவுக்கு நன்றி என்றும், ஜனநாயக முறைப்படி தேர்வு நோக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் பாரதிராஜா அறிவித்தார்.

அத்துடன் சங்கத்தின் மூத்த உறுப்பினராக தனது பேரன்பு தொடரும் என்றும் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, வரும் 21ஆம் திகதி அனைத்து பொறுப்புகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்து பாரதிராஜா கூறுகையில், ‘சொந்த பணிகள் மற்றும் சில சூழ்நிலைகளால் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருக்கிறேன்.

மூளைச்சலவை செய்து என் மனதை திசை திருப்பியதாக கூறுவது மனவேதனை அளிக்கிறது. எந்த விடயத்திலும் நான் தைரியமாகவும், தெளிவோடும் முடிவெடுப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பலர் பாரதிராஜாவை சந்தித்து, மீண்டும் இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி கடிதம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்