ஹாலிவுட் பிரபலம் அர்னால்டின் மகளை கரம்பிடித்த அவெஞ்சர்ஸ் பட நடிகர்! பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் வாழ்த்து

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஹாலிவுட்டின் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான அர்னால்ட் ஸ்வாஜ்நேகரின் மகள் கேத்தரினுக்கும், அவெஞ்சர்ஸ் பட நடிகர் கிறிஸ் பிராடுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடந்தது.

பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்ட் ஸ்வாஜ்நேகர் நடிப்புடன், அரசியல்வாதியாகவும் தொடர்ந்து வருகிறார். இவரது மகள் கேத்தரின் சில புத்தகங்களை எழுதியிருக்கிறார். இந்நிலையில் கேத்தரினுக்கும், ஹாலிவுட் நடிகர் கிறிஸ் பிராட்டுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடந்துள்ளது.

அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவஞ்சர்ஸ் எண்ட்கேம், ஜூராசிக் வேர்ல்ட், கார்டியன்ஸ் ஆப் கேலக்ஸி ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கிறிஸ் பிராட். பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர், கடந்த 2009ஆம் ஆண்டு ஹாலிவுட் நடிகையான அன்னா ஃபாரிசை காதலித்து திருமணம் செய்தார்.

இவர்களுக்கு ஜேக்(6) என்ற மகன் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு கிறிஸ் பிராட் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் கேத்தரினை அவர் காதலித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில், ஜூன் 8ஆம் திகதி திருமணம் செய்துகொள்ள கிறிஸ் பிராட்-கேத்தரின் இருவரும் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மொண்டிசிட்டோ நகரில் இவர்களின் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். கிறிஸ் பிராட் திருமணம் குறித்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன், ‘திருமணத்திற்கு சம்மதித்ததில் மிகவும் மகிழ்ச்சி கேத்தரின்’ என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் கேத்தரினும், ‘உங்களை விட்டு வேறு யாருடனும் இந்த வாழ்க்கையை வாழ விரும்பவில்லை’ என தெரிவித்துள்ளார்.

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா உட்பட ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்