இளையராஜாவுடன் மீண்டும் இணையும் எஸ்.பி.பி!

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறவிருக்கும் கச்சேரியில் இளையராஜாவுடன் பாடகர் எஸ்.பி.பி இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் ஓர் ஆண்டுக்கும் மேலாகப் பாடல்களில் ராயல்டி பிரச்னையால் பேசாமல் இருந்து வந்த இந்த இரண்டு இசை மேதைகளும் இணைந்து ஒரே மேடையில் இசைக் கச்சேரி நடத்த உள்ளனர்.

இளையராஜாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் இளையராஜாவை வைத்து பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தியது.

அந்த நிகழ்ச்சியை நேரிலும், தொலைக்காட்சியிலும் கண்டுகளித்த பல இசை ரசிகர்களுக்கு அதில், யேசுதாஸ், எஸ்.பி.பி, ஜானகி போன்ற இளையராஜாவின் ஆஸ்தான பாடகர்கள் பங்கேற்காததை வருத்தத்துடன் பதிவு செய்து வந்தனர்.

அதிலும் எஸ்.பி.பி இல்லாத ஓர் இளையராஜா கச்சேரியா என்ற கேள்வி பலரால் கேட்கப்பட்டது. ஏற்கெனவே பாடல்களின் காப்புரிமை யாருக்குச் சொந்தம் என்ற விவகாரத்தில் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பி-க்கும் இடையே சட்டச் சிக்கல்கள் நிலவி வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் அவர் இல்லாதது மேலும் ஒரு குறையாகிப்போனது.

இந்நிலையில், தற்போது இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ம் திகதி சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் `இசை செலிப்ரேட்ஸ் இசை' என்ற இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கான ஒத்திகைகள் வருகிற மே 22 ஆம் திகதி முதல் தொடங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை நிகழ்ச்சிக்கான முன்பதிவு செய்யும் இணையத்திலும் உறுதி செய்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers