புல்வாமா தாக்குதல்: பிரதமரை மறைமுகமாக தாக்கி பிரபல நடிகர் சர்ச்சை பதிவு

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு

புல்வாமா தாக்குதலை வைத்து தேர்தல் வாக்களிப்பை முடிவெடுக்காதீர்கள் என பிரபல தென்னிந்திய நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் திகதி அன்று, ஜெய்ஷ் இ முகமது என்கிற பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த சம்பவமானது ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் பலத்த பாதுகாப்பு கொண்ட இந்தியாவிற்கு 350கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் எப்படி வந்தது என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த்த தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ புல்வாமா தாக்குதல் சம்பவத்தைக் கொண்டு, வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவெடுப்பீர்கள் எனில், அது தீவிரவாதத்திற்கு வாக்களிப்பதாகவே பொருள்” என பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவிற்கு கீழ் இணையதளவாசிகள், பிரதமர் மோடியை சித்தார்த் மறைமுகமாக விமர்சிப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக புல்வாமா தாக்குதலில் சதி இருப்பதாக, மரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. மீண்டும் பிரதமராக மோடி ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டை காப்பற்ற முடியும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்