பெரும் புகழ் ஈட்டிய ‘பெருந்தச்சன்’ இயக்குநர் மறைவு: திரையுலகம் கண்ணீர் அஞ்சலி

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

‘பெருந்தச்சன்’ என்ற மலையாள படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் தோபில் அஜயன் உடல்நலக்குறைவால் காலமானார்.

1991ம் ஆண்டு வெளியான ‘பெருந்தச்சன்’ என்ற மலையாள படத்தை இயக்கியவர் அஜயன். தனது முதல் படத்திலேயே மலையாள திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர்.

முதல் படமே பல விருதுகளை வென்றது. சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது, கேரள அரசின் மாநில விருது, சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது.

1992ம் ஆண்டுக்கான கோல்டன் லியோபோர்டு விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. அஜயன் தனது திரைத்துறை வாழ்க்கையை உதவி ஒளிப்பதிவாளராக தொடங்கினார்.

பிறகு தோப்பில் பாஷி, பரதன், மத்மராஜன் உள்ளிட்ட இயக்குநர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றினார். சென்னையில் அப்போதைய அடையார் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் திரைப்பட துறைக்கான டிப்ளமோ படிப்பை படித்தார்.

அஜயன் சில தமிழ்ப் படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அஜயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருக்கு வயது 66. காலமான இயக்குநர் தோபில் அஜயனுக்கு சுஷாமா என்ற மனைவியும் பார்வதி, லட்சுமி என்ற மகள்களும் உள்ளனர்.

அஜயன் இறப்பு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ‘பெருந்தச்சன்’ என்ற திரைப்படம் மூலம் சினிமா ரசிகர்களின் மனதை வென்றவர் அஜயன்.

அந்தத் திரைப்படத்துக்குப் பின் மாநில அரசின் பல விருதுகளையும் அவர் வாங்கியுள்ளார். அஜயன் பல ஆவணப்படங்களின் மூலம் தனது திறமையை நிரூபித்தவர் என்று தெரிவித்துள்ளார்.

1991ம் ஆண்டு வெளியான ‘பெருந்தச்சன்’, எம்.டி.வாசுதேவன் நாயர் கதையில் உருவான திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தில் மலையாள நடிகர் திலகன் மற்றும் தமிழ் நடிகர் பிரசாந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers