விஸ்வரூபமெடுக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்! படப்பிடிப்பை நிறுத்திய பிரபல நடிகர்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஹிந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து, பிரபல நடிகர் அக்‌ஷய்குமார் படப்பிடிப்பை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திரையுலகில் தற்போது #Metoo ஹேஷ்டாக் மூலம், நடிகைகள் பலர் பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர். ஹிந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் நடிகர் நானா படேகர் மீது அதிரடியாக பாலியல் புகார் கூறியிருந்தார்.

இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக, நடிகர் அக்‌ஷய்குமாரின் மனைவி டிவிங்கிள் கண்ணாவும் தனுஸ்ரீக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், அவரது கணவர் அக்‌ஷய்குமாரின் ’ஹவுஸ்புல்-4’ படத்தில் நானா படேகர் நடிப்பது குறித்து தனுஸ்ரீ அதிருப்தி தெரிவித்தார். மேலும், படத்தின் இயக்குநர் சஜித்கான் மீதும் நடிகை ராச்சல் வொயிட், உதவி இயக்குநர் சலோனி சோப்ரா, பத்திரிகையாளர் கரிஷ்மா உபாத்யாய் ஆகியோர் பாலியல் புகார்களை தெரிவித்திருந்தனர்.

இவற்றை கேள்விப்பட்ட அக்‌ஷய்குமார் நேற்று நடக்கவிருந்த ‘ஹவுஸ்புல்-4’ படத்தின் படப்பிடிப்பை நிறுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘இத்தாலியில் இருந்து இப்போதுதான் இந்தியா திரும்பினேன். மீடியாவில் வந்துள்ள பாலியல் செய்திகள் அதிர்ச்சியடைய வைத்தது. அதனால் தயாரிப்பாளர்களிடம், படப்பிடிப்பை Cancel செய்யுமாறு கோரிக்கை வைத்துவிட்டேன். விசாரணை முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நடிக்க மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் சஜித்கான் கூறுகையில், ‘என் மீது கூறப்பட்டுள்ள புகார் காரணமாக என் குடும்பத்தினர், என் தயாரிப்பாளர், நான் இயக்கும் ஹவுஸ்புல்-4 படக்குழுவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் இதற்கு பொறுப்பேற்று இந்தப் படத்தை இயக்குவதில் இருந்து விலகிக் கொள்கிறேன். என் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் அனைத்தையும் மறுக்கிறேன்.

உண்மை வெளிவருவதற்குள் நீங்களே தீர்ப்பு எழுதி விடாதீர்கள் என்று மீடியா மற்றும் நண்பர்களிடம் கேட்டுகொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். இதேபோல் நானா படேகரும் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதால் இந்த விடயம் ஹிந்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்