எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்: நடிகை கங்கனா ரனாவத் பரபரப்பு புகார்

Report Print Kabilan in பொழுதுபோக்கு

ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத், குயீன் பட இயக்குநர் மீது பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான ‘குயீன்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை விகாஸ் பெஹல் இயக்கியிருந்தார்.

ஹிந்தி திரையுலகில் நடிகை தனுஸ்ரீ தத்தா, பிரபல நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கங்கனா ரனாவத் தற்போது இயக்குநர் விகாஸ் பெஹல் மீது அதிரடி பாலியல் புகாரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் குயீன் படத்தில் நடித்தபோது, விகாஸ் பெஹல் திருமணமானவர் என்றாலும் தினமும் ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது பற்றி பெருமையாக பேசுவார்.

நான் மற்றவர்களை பற்றி கருத்து கூறுபவள் அல்ல. ஆனால், ஒருவர் செக்ஸுக்கு அடிமையாக இருந்தால் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அவர் தினமும் இரவு பார்ட்டி பண்ணுவார்.

இரவில் நான் சீக்கிரம் தூங்கச் செல்வதை கிண்டல் செய்வார். நான் அவரை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து என் தலைமுடியின் வாசத்தை நுகர்வார். மேலும் என் கழுத்தில் அவர் முகத்தை புதைப்பார்.

என் பலத்தை எல்லாம் பயன்படுத்தி அவர் பிடியில் இருந்து வெளியே வருவேன். உன் வாசம் எனக்கு பிடிக்கும் என்று விகாஸ் என்னிடம் கூறுவார். அவரிடம் ஏதோ சரியில்லை என்பது மட்டும் எனக்கு தெரியும்.

விகாஸ் மீது முன்பு பாலியல் புகார் தெரிவித்த பெண்ணுக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். அந்த நேரம், அவர் ஹரியானாவில் தங்க பதக்கம் வாங்கிய பெண் பற்றிய படத்தை இயக்கும் கதையுடன் என்னிடம் வந்தார்.

நான் அந்த பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்ததால் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். நல்ல கதை கைவிட்டு போனதில் எனக்கு கவலை இல்லை. எனக்கு எது சரி என்று பட்டதோ அதையே செய்தேன்.

அந்த சம்பவத்தை அப்படியே மூடி மறைத்துவிட்டார்கள். அந்த பெண்ணுக்கு அப்போதே நான் ஆதரவு தெரிவித்தேன். ஹாலிவுட் போன்று பாலியல் புகார்கள் தெரிவிக்கும் #MeToo இயக்கம், இந்தியாவிலும் துவங்கும் என்று நான் நினைத்தது தவறு’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers