இளையராஜாவுடன் பிரச்சனை முடியவில்லை...காலை தொட்டு கும்பிட தயங்கமாட்டேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

இளையராஜா இசையமைத்த பாடல்களை நான் மீண்டும் பாடுவேன் என்றும் அது தொடர்பான பிரச்சனைகள் வந்தால் சட்டப்படியாக எதிர்கொள்வேன் என எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

அதன்பிறகு இளையராஜா பாடல்களை மேடையில் பாடுவதை தவிர்த்து வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தற்போது மீண்டும் அந்த பாடல்களை பாட தொடங்கி உள்ளார்.

இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியதாவது,

இளையராஜா, தனது பாடல்களை பாடக்கூடாது என்று சொன்னாலும் நான் பாடுவேன். பாடிக்கொண்டுதான் இருப்பேன். அவர் இசையமைத்த பாடல்களை பாடுவதற்கு நேரடியாக எனக்கு தடை விதிக்கவில்லை.

அமெரிக்காவில் ‘எஸ்.பி.பி 50’ என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது எனது பாடல்களை யார் பாடினாலும் அதற்கு ராயல்டி கொடுக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

அந்த பிரச்சினை இன்னும் ஓயவில்லை. அவர் ஏன் அப்படி செய்தார் என்று எனக்கு தெரியாது.

இது நடந்த பிறகு ஒரு ஆண்டுவரை அவரது பாடல்களை பாடாமல் இருந்தேன். அதன்பிறகு யோசித்தேன். நான் இளையராஜா இசையில்தான் அதிகமாக பாடினேன். எனவே அதிலும் எனக்கு அதிக பங்கு இருக்கிறது என்று தோன்றியது. அதன்பிறகு திரும்ப பாட ஆரம்பித்து விட்டேன்.

இதற்காக சட்டப்படி அவர் நடவடிக்கை எடுத்தால் நானும் சட்டப்படியே பதில் சொல்ல முடிவு செய்து இருக்கிறேன். எனது வேதனை என்னவென்றால் ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல.

அவர் எப்படி அந்த பணத்தை வசூலிக்கிறார் என்று சொல்ல வேண்டும். எந்த பாடல்மீது அவருக்கு உரிமை இருக்கிறது என்பதையும் தெளிவாக கூற வேண்டும்.

ஒரு இசையமைப்பாளராக இப்போதும் சரி எப்போதும் சரி அவரது காலை தொட்டு கும்பிடுவதற்கு தயங்கவே மாட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers