எனக்குப் பிடித்த 5 பெண்கள்: பிக் பாஸ் ஆரவ்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

மகளிர் தினத்தை முன்னிட்டு, ‘உங்களுக்குப் பிடித்த 5 பெண்களைப் பட்டியலிடுங்கள்’ என ‘பிக் பாஸ்’ புகழ் நடிகர் ஆரவ்விடம் கேட்டோம். “பெண்களுக்கும் எனக்கும் ரொம்ப தூரமாச்சே ப்ரதர்” என்று கலாய்த்தவர், யோசித்து யோசித்துப் பட்டியலிட்ட 5 பெண்களைப் பற்றிய தகவல்கள் இங்கே…

தாஹிரா

என்னுடைய அம்மா. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத அம்மாக்களுக்கே உரிய அன்பு அவரிடம் இருக்கும். ‘நான் நல்லா இருக்க வேண்டும்’ என சின்ன வயதில் இருந்து இப்போதுவரை நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன். நான் என்ன சம்பாதிக்கிறேன் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதே கிடையாது. என்னிடம் இருக்கும் பல நல்ல விஷயங்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டதுதான். நான் எப்போதுமே ஆச்சரியமாகப் பார்க்கக் கூடிய ஒரே ஆள் அம்மா மட்டுமே!

கீதாஞ்சலி

என்னுடைய பள்ளித் தலைமை ஆசிரியை. நான் இன்று இந்த நிலையில் இருக்க முக்கியக் காரணம் அவர். என்னுடைய திறமைகளைக் கண்டுபிடித்து பயிற்சியும், ஊக்கமும் அளித்தவர். நான் நன்றாக இருக்க வேண்டும் என என் பெற்றோர்கள் நினைப்பது இயல்பு. ஆனால், அதைத் தாண்டி இன்னொருவர் ஆசைப்படுவது என்பது பெரிய விஷயம். ப்ரீ கேஜி முதல் ஸ்கூல் படிப்பு முடியும்வரை எனக்கு இன்னொரு அம்மாவாக இருந்து பார்த்துக் கொண்டவர்.

ஜெயலலிதா

தமிழகத்தின் முன்னாள் முதல்வர். நான் பார்த்து வியந்த ஆளுமைமிக்க ஒரு பெண்மணி. கட்சியையும், மாநிலத்தையும் ஒரு பெண் ஆட்சி செய்வது என்பது மிகப்பெரிய விஷயம். அதுவும் ஆணாதிக்கம் மிகுந்த காலகட்டத்தில் ஒரு பெண் மேலே வருவது என்பது போற்றத்தக்க விஷயம். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது அவரைப் பற்றிப் புரிந்து கொண்டோமோ, இல்லையோ… அவர் இறந்தபிறகு அவரைப் பற்றி நன்றாகவே புரிந்து கொண்டுள்ளோம்.

நயன்தாரா

ரசிகர்கள் கொண்டாடும் நடிகை. எந்தவிதமான பின்னணியும் இல்லாமல் சினிமாவில் ஹீரோயினாக இத்தனை வருடங்கள் நிலைத்திருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இடையில் கொஞ்சம் ப்ரேக் எடுத்தாலும், மீண்டும் நடிக்கவந்து இன்றைக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார். ஒரு ரசிகனா எப்போதுமே அவர்மீது மரியாதை இருக்கிறது.

ஓவியா

ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிகர்கள் நெஞ்சில் இடம்பிடித்த நடிகை. மக்களுடைய அன்பு கிடைப்பது என்பது கஷ்டமான விஷயம். அதை, அவர் சம்பாதித்திருக்கிறார். நாம் நாமாக இருப்பதுதான் உலகத்திலேயே மிகவும் கடினமானது. சில இடங்களில் நாம் நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், ஓவியா அப்படி நடிப்பது கிடையாது. அவரைப் பிடிக்க எனக்கும் அதுதான் காரணம்.

- Thehindu

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்