நடிகைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளியில் பேசாததன் காரணத்தை விவரித்துள்ளார் பிரபல நடிகை ராதிகா ஆப்தே.
அக்ஷய் குமார்- ராதிகா ஆப்தே நடித்துள்ள ‘பேட்மேன்’ திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் நடிகை ராதிகா பேட்டி அளித்துள்ளார்.
அதில் மனம் திறந்து பேசியுள்ள ராதிகா கூறுகையில், “பாலியல் தொல்லை பற்றி நடிகைகள் யாரும் தைரியமாக பேசுவது இல்லை. அப்படி பேசினால் அவர்களுடைய எதிர்காலம் நாசமாகிவிடும். அவர்களுடைய திரை உலக கனவு, கனவாகவே முடிந்துவிடும். இதனால் தான் நடிகைகள் யாரும் பாலியல் தொல்லை குறித்து வாய் திறப்பது இல்லை.
நடிகைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பேச வேண்டும். பேசினால் மட்டும் போதாது. வற்புறுத்தல் வரும்போது முடியாது என்றும் கூற வேண்டும். இல்லை யென்றால், அதை நிறுத்த முடியாது என நடிகைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ள ராதிகா, பாலியல் தொல்லை குறித்து துணிச்சலாக பேசுவோருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த மாற்றம் உடனே நடந்துவிடாது. மாற்றம் ஏற்பட மக்களுக்கு தைரியம் வர வேண்டும். எனக்கு மோசமான பாலியல் தொந்தரவு அனுபவம் எதுவும் இல்லை.
எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் பற்றி ஏற்கனவே பேசிவிட்டேன். நான் எதையும் மறைப்பது இல்லை. அதே வேளை, மற்றவர்களின் பாலியல் தொல்லை விவகாரம் பற்றியும் பேசமாட்டேன்” என கூறியுள்ளார்.