சிங்கள பாடசாலை ஒன்றின் கீழ் ஒரு பிரிவாக இருந்தாலும் வருடந்தோறும் வளர்ச்சிக்கண்டு வரும் தமிழ் பிரிவு பாடசாலை ஒன்றில் இந்த முறையும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 4 பேர் சித்தி பெற்றுள்ளனர்.
11 மாணவர்கள் 3 ஆசிரியர்களுடன் 2013இல் ஆரம்பிக்கப்பட்ட பின்தங்கிய பிரதேசமான கேகாலை வரக்காபொல-அம்பேபுஸ்ஸ சிங்கள மகாவித்தியாலயத்தின் தமிழ் பிரிவிலேயே இந்த ஆண்டு, 4 மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளில் சித்திப்பெற்றுள்ளனர்.
இதில் ஒரு மாணவி 191 புள்ளிகளையும், இரண்டு மாணவர்கள் 178 மற்றும் 170 புள்ளிகளையும், ஒரு மாணவி 160 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
வரக்காபொல நகரில் தமிழ் பாடசாலை ஒன்று வேண்டும் என்று பிரதேச தமிழ் மக்களின் கோரிக்கைக்கு இணங்க சப்ரகமுவ முன்னாள் முதலமச்சர் மஹிபால ஹேரத், பாடசாலை ஒன்றுக்கான காணி ஒதுக்கப்படும் வரை தற்காலிக ஏற்பாடாகவே வரக்காபொல - அம்பேபுஸ்ஸ சிங்கள மகா வித்தியாலயத்தின் ஒரு மண்டபத்தை இரண்டாக மறைத்து இந்த தமிழ்ப்பிரிவை ஆரம்பித்து வைத்தார்.
அன்று ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையே இன்று 8ஆம் வகுப்பு வரையிலான 113 மாணவர்களுடன் 13 ஆசிரியர்களால் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியில் இந்த பாடசாலையில் 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்திப்பெற்று வருவதாக பாடசாலையின் அதிபர் முருகன் ராஜேஸ்வரி தெரிவித்தார்.
அத்துடன் 8 ஆம் வகுப்பு வரையிலான இந்த பாடசாலையில் அடுத்த ஆண்டில் 9 வகுப்பும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.